Home இந்தியா இனி ஐசிசி தலைவராக சீனிவாசன் தொடர்வாரா?

இனி ஐசிசி தலைவராக சீனிவாசன் தொடர்வாரா?

780
0
SHARE
Ad

srinivasanசென்னை, ஜூலை 15 – இந்தியர்களைப் பொருத்தவரை கிரிக்கெட் என்பது மதம். ஆனால், தொழில்அதிபர்களுக்கும், பெரும் புள்ளிகளுக்கும் அது பணம். இந்த நிலை, இன்று நேற்று தொடங்கியதல்ல, இந்தியர்கள் விளையாட்டை, வெறித்தனமாய் பார்க்கத் தொடங்கியது முதல் ஆரம்பமானது. ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒரு பெரும் புள்ளி, சூதாட்டத்தில் சிக்குவதும், வாழ்நாள் தடை பெறுவதும் இந்திய கிரிக்கெட்டில் வாடிக்கை தான். தற்போது, ஐபிஎல் போட்டிகளிலும் இது தொடர்ந்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டுகள் தடை, குருநாத் மெய்யப்பனுக்கும், ராஜ் குந்த்ராவுக்கும் வாழ்நாள் தடை என முன்னாள் நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான குழு தண்டனை வழங்கி உள்ள நிலையில், பெரும்பாலானவர்களின் கவனம் குருநாத் மெய்யப்பனின் மாமனாரும், சென்னை சூப்பர் கிங்க்ஸின் உரிமையாளருமான என்.சீனிவாசன் மீது திரும்பி உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அவர் வகிக்கும் ஐசிசி தலைவர் பதவி தான்.

ஏற்கனவே முட்கல் கமிட்டியின் பரிந்துரையினால் என்.சீனிவாசனை, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவரின் அணிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதில் இருந்து சூதாட்டப் பின்னணியில் சீனிவாசனும் இருக்கிறார் என தெளிவாகிறது.

#TamilSchoolmychoice

இந்த சூழலில் இந்தியாவின் பிரதிநிதியாக அவர் ஐசிசி-ன் தலைவர் பதவியை வகிப்பது முறையல்ல என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவரின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பருடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் சூழலை உணர்ந்து தாமாக பதவி விலகுவாரா? அல்லது பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் இது தொடர்பாக ஏதேனும் முடிவெடுப்பாரா என்பது தெரியவில்லை.