முன்னுரை: மெல்லிசை மன்னர் என்றும் எம்.எஸ்.வி என்றும் தமிழக மக்களால் பாசத்தோடு அழைக்கப்பட்ட எம்.எஸ். விஸ்வநாதன் என்னும் 87 வயதுக் குழந்தை, இன்று அதிகாலை 4.15 மணியளவில் இப்பூவுலக வாழ்வை நீத்து,கோடானு கோடி இரசிகப் பெருமக்களையெல்லாம் மீளாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு விண்ணுலகம் போய்ச் சேர்ந்துவிட்டது.
மேற்கத்திய இசையையும் ஹிந்திப் பாடல்களையுமே இரசித்துக் கொண்டிருந்த இரசிகர்களை, முதன்முதலில் தமிழ்த் திரைப்படப் பாடலை இரசிக்கும்படி மடை மாற்றிய இசை மேதை எம்.எஸ்,வி. அதுமட்டுமின்றி, தரமான பாடல்களைத் தந்து தமிழ்த் திரைப்பாடல்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் தேடித் தந்தவரும் எம்.எஸ்.வி. என்றால் மிகையாகாது!
தொலைக்காட்சி வருவதற்கு முன்பு ஒட்டுமொத்தத் தமிழ் இனமே, வானொலியில் எம்.எஸ்.விஸ்வநாதனின் பாடல்களைத் தான் பெரும்பாலும் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த அளவுக்குத் தொடர்ச்சியாக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தன் இசையால் தமிழக மக்களைக் கட்டிப் போட்டிருந்தவர் இவரைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. அத்தகைய இசைச் சகாப்தம் அவர்.
எம்.எஸ்.வி-யின் பால்ய பருவம்:
மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்பதன் சுருக்கம் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். அதையும் சுருக்கித் திரையுலகினர் எம்.எஸ்.வி என்றனர். பின்பு மெல்லிசையில் சிறந்திருந்ததால் மெல்லிசை மன்னர் என்றனர். ஆக, இவரது பிறப்புப் பெயர்: எம்.எஸ்.விஸ்வநாதன். சிறப்புப் பெயர்: மெல்லிசை மன்னர்.
அவர் பிறந்தது பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமம். பிறந்த ஆண்டு 1928. அப்பா: மனயங்கத் சுப்பிரமணியன் – அம்மா: நாராயணிக் குட்டி.
எம்.எஸ்.வி. மழைக்குக் கூடத் தப்பித் தவறிப் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியதில்லை.இவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது அப்பா இறந்து போய் விட, கண்ணனூரில் உள்ள தாத்தா வீட்டில் தான் வளர்ந்தார்.
சிறுவயதிலேயே இவரது மூளையில் இசைத் தேவதை புகுந்துவிட, நாவில் சரஸ்வதி வந்து அமர்ந்துவிட, இசையில் ஆவல் அதிகமாகி, நீலகண்ட பாகவதரிடம் சேர்ந்து இசை பயிலத் தொடங்கினார்.இசையைக் கற்றுத் தெளிந்து 13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார்.
குருவுக்குத் தட்சணை கொடுக்க இயலாமல், அதற்குப் பிரதி உபகாரமாக அவருக்குப் பணி விடை செய்து அந்தக் கடமையை ஈடுகட்டினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!அந்த அளவுக்கு இசையின் மீது அப்போதே அவ்வளவு பற்று! “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று சொன்ன ஒளவையின் வாக்கிற்கு எடுத்துக்காட்டு அவர் தான்.
சினிமாப் பிரவேசம்:
இளம் வயதில் நடிகராகவும் பாடகராகவும் ஆக வேண்டும் என்று ஆசை. குள்ள உருவம் அவரது நடிப்பாசையில் மண்ணைப் போட்டது. சரி, பாடகராகலாம் என்றாலோ அவரது கரகரப்பான குரல் அதற்குத் தடை போட்டது. என்னதான் கச்சேரி செய்திருந்தாலும், தனி ஆவர்த்தனமே பண்ணியிருந்தாலும் சினிமாவிற்கென்று தனி இலக்கணம் தேவைப்பட்டது.
அதனால், அது வேலைக்கு ஆகாதென்று சேலம் மாடர்ன் தியேட்டர் கம்பெனியில் சர்வராக வேலைக்குச் சேர்ந்தார். அது 1950-ஆம் ஆண்டு. அப்போது மாடர்ன் தியேட்டர் படங்களுக்கெல்லாம் எஸ்.எம் சுப்பையா நாயுடு தான் இசை. அவருக்குத் தேவையான வேலைகளைச் செய்து கொடுப்பதுதான் எம்.எஸ்.வி.யின் வேலை.
அப்படி ஒருநாள் ஒரு பாடலுக்கான மெட்டு சரிவர அமையாமல் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார் எஸ்.எம் சுப்பையா நாயுடு. அருகிலிருந்து கவனித்துக் கொண்டிருந்த எம்.எஸ்.வி.தயங்கித் தயங்கி அந்தப் பாடலின் சூழ்நிலைக்குத் தக்கபடி ஒரு மெட்டைப் பாடிக் காண்பிக்க, எஸ்.எம்.சுப்பையா நாயுடுவுக்கு ஒரே ஆச்சரியம்.மெட்டு மிகவும் அருமையாக இருந்ததால்,அந்த மெட்டிலேயே பாடல் பதிவு செய்யப்பட்டது; பாடலும் பிரபலமானது.
ஆனால், அந்தச் சமயத்தில் எஸ்.எம்.சுப்பையா நாயுடு அந்த மெட்டு தன்னுடையது இல்லை: எம்.எஸ்.வி உடையது என்கிற உண்மையைச் சொல்லவில்லை. அதைப்பற்றி எம்.எஸ்.வியும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
மாடர்ன் தியேட்டர் நிறுவனம் சேலத்திலிருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து படங்கள் தயாரிக்கத் தொடங்கிய போது, எஸ்.எம்.சுப்பையா நாயுடு உடல்நலம் குன்றியிருந்த காரணத்தால், அவரால் சென்னைக்குச் சென்று பணியாற்ற முடியாத நிலை. அப்போது அவர் டி.ஆர்.சுந்தரத்திடம் அந்த உண்மையைக் கூறி, ‘திறமையான பையன்; அவனுக்கு வாய்ப்புக் கொடுங்கள்” எனப் பரிந்துரை செய்தார்.
அதன்பிறகு அவரது திறமை வெளியில் தெரிய ஆரம்பித்தது.
டி.கே.ராமமூர்த்தியுடன் இணைந்தார்:
அதையடுத்து அவர் இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் ஆர்மோனியக் கலைஞராகச் சேர்ந்தார். அப்போது அங்கே டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். இருவருக்கும் இசையில் நல்ல புரிதல் ஏற்பட்டது; நண்பரானார்கள்.
அவர்களின் குரு சி.ஆர்.சுப்புராமனின் திடீர் மறைவால், பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் இணைந்து முடித்துக் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து 1952-ல் ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, 1965 ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் வரை, 13 ஆண்டுகளில் 700 திரைப்படங்களுக்கும் மேலாக இருவரும் இணைந்து இசையமைத்தனர்.
காலத்தின் கட்டாயத்தால்ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு டி.கே. ராமமூர்த்தியைப் பிரிந்து, தனியாகத் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் என 500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தார் எம்.எஸ்.வி. கடைசியாக அவர் இசையமைத்த படம் சுவடுகள்.
எம்.எஸ்.வி – இசைஞானி இளையராஜா கூட்டணி
எம்.எஸ்.வி இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து சில படங்களில் பணியாற்றியுள்ளார்.
* மெல்ல திறந்தது கதவு
* செந்தமிழ்ப் பாட்டு
* விஷ்வ துளசி
1970-களின் பிற்பகுதியில் தனக்குப் போட்டியாளராக வளர்ந்த இளையராஜாவோடு சேர்ந்து அவர் இசை அமைத்ததே, அவரது விசால மனப்பான்மைக்கு அடையாளம் எனக் கூறலாம்.
எம்.எஸ்.வி பெற்ற பட்டங்களும் விருதுகளும்:
1963-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மதராஸ் பப்ளிகேஷன் கல்சுரல் அகாடமி மற்றும் இந்து நாளிதழ் சார்பில், இயக்குநர் ஸ்ரீதர் முன்னிலையில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவருக்கும் நடிகர்திலகம் சிவாஜி கணேசனால்’ மெல்லிசை மன்னர்கள்” என்னும் பட்டம் வழங்கப்பட்டது.
இதுதவிர, கலைமாமணி, திரை இசைச் சக்கரவர்த்தி ஆகிய பட்டங்களும், ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றிருக்கிறார்.
மெல்லிசை மன்னருக்குக் கலைமாமணி, ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் கிடைத்திருந்தாலும், தேசிய விருதோ, தமிழ்நாடு அரசு விருதோ கிடைக்காதது வருந்தத்தக்கது.
மேலும்,மத்திய அரசு வழங்கும் பத்மஸ்ரீ, பதமபூஷன், பத்ம விபூஷன் முதலிய விருதுகளில் எதுவும் அவருக்கு வழங்கப்படாதது வேதனைக்குரியது.
தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை:
தமிழ்த்தாய் வாழ்த்தான `நீராடும் கடலுடுத்த’ பாடலுக்கு இசை அமைத்த பெருமை எம்.எஸ்.வி-யையே சேரும். மோகன ராகத்தில் இனிமையான பாடலாக அமைந்து, அனைவராலும் எளிதாகப் பாடக் கூடியதாக இருப்பது அதன் சிறப்பு.
உலக இசையைத் தமிழில் புகுத்திய பெருமை:
அதே போல், உலக இசையைத் தமிழில் புகுத்திய பெருமை இவரேயே சாரும். எகிப்திய இசையைப் ‘பட்டத்து ராணி’ பாடலிலும், பெர்சியன் இசையை ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாடலிலும், ஜப்பானிய இசையைப் ‘பன்சாயி காதல் பறவை’ பாடலிலும், லத்தீன் இசையை ‘யார் அந்த நிலவு?’ பாடலிலும், ரஷ்ய இசையைக் ‘கண் போன போக்கிலே கால் போகலாமா’ பாடலிலும், மெக்சிகன் இசையை ‘முத்தமிடும் நேரமெப்போ’ பாடல்களின் மூலம் கொண்டு வந்தவர்.
குடும்பம்:
அவருடைய மனைவி பெயர் ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்களும், லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்களும் அவர்களுக்கு உண்டு. ஆனால், அவரைப் போல் யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!
தெய்வபக்தியும் குருபக்தியும்:
ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு பேச்சிற்கு இடையிலும் “முருகா முருகா’’ என்று தன் இஷ்ட தெய்வமான முருகனின் நாமத்தைச் சொல்வது அவரது வழக்கம்.
தன் குரு எஸ்.எம். சுப்பையா நாயுடுக்குப் பாராட்டுக் கூட்டம் நடத்தி, பொற்கிழி அளித்தார். அதுமட்டுமல்லாமல், வயதான காலத்தில் அவர் ஆதரவற்று நின்ற போது அவரைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து, அவரது கடைசிக் காலம் வரை, தன் வீட்டிலேயே வைத்திருந்து, இறந்த பிறகு இறுதிக் கடமைகளையும் அவரே செய்தார்.
தொழில் பக்தியிலும் அவர் சிரத்தையோடு இருந்தார்.
முடிவுரை:
தமிழர்களின் காதலை, பாசத்தை, துயரத்தை, கொண்டாட்டத்தை, வீரத்தை, வேதனையை, மகிழ்ச்சியை, தனிமையை, பக்தியை, கிண்டலை…இப்படி எல்லா உணர்வுகளையும் இசையாக மாற்றிக்கொடுத்த மேதையான எம்.எஸ்.வி.யின் பூத உடல் இன்று மறைந்துபோனாலும், அவரது இசை, தமிழ் உள்ளளவும் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அவரது நெருங்கிய நண்பர் கண்ணதாசன் தன்னைப் பற்றி-
நான் காவியத்தாயின் இளைய மகன்;
காதல் பெண்களின் பெருந்தலைவன்.
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை;
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!” என்று சொன்னதைப் போல, எம்.எஸ்.வி-க்கும் சொல்லலாம்.
“இசையெனும் தாயின் இளைய மகன்;
தமிழக மக்களின் பெருங்கலைஞன்.
அவன் நிரந்தரமானவன் அழிவதில்லை;
எந்த நிலையிலும் அவனுக்கு மரணமில்லை!
-கட்டுரை: ஜோதிமுருகன்