கோலாலம்பூர்: புதிய யுரேனியம் செறிவூட்டல் கருவிகளை வெளியிட்ட ஒரே நாளில் ஈரானில் ஒரு அணுசக்தி நிலையம் “நாசவேலை” காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று நாட்டின் உயர் அணுசக்தி அதிகாரி கூறுயுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரானுக்கு தெற்கே உள்ள நடான்ஸ் வளாகத்தில் மின்சாரம் செயலிழந்ததற்கு பயங்கரவாதச் செயல் காரணம் என்று அலி அக்பர் சலேஹி கூறினார்.
எவ்வாறாயினும், இஸ்ரேலிய பொது ஊடகங்கள் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இது இஸ்ரேலிய இணைய தாக்குதலின் விளைவு என்று கூறியது. இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் நேரடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
ஆனால், சமீபத்திய நாட்களில் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த எச்சரிக்கைகளை அது அதிகரித்துள்ளது.
2018- ஆம் ஆண்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்கா கைவிட்ட 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான அரசதந்திர முயற்சிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் சமீபத்திய சம்பவம் ஏற்பட்டுள்ளது.