கோலாலம்பூர் – இதுவரை நடத்தப்பட்ட பெர்சே பேரணிகளிலேயே மிகப் பிரம்மாண்டமானது, வெற்றிகரமானது எனக் கருதப்படும் பெர்சே 4.0 பேரணி எதிர்பாராத விதமாக, சம்பந்தமில்லாத ஒருவரை ஹீரோவாக்கியிருக்கின்றது.
அவர்தான் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்!
நஜிப்பை பதவியில் இருந்து விலக்குவதற்கு மகாதீரும் போராடுகின்றார், பெர்சேயும் போராடுகின்றது என்ற ஓர் அம்சம் மட்டும்தான் அவர்களுக்கிடையிலான ஒற்றுமை.
மற்றபடி மலேசிய அரசியலின் வரலாற்றுப் பக்கங்களை பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால், இன்றைய வீதிப்போராட்டங்கள் உருவாகுவதற்கான காரணமே மகாதீர்தான் என்பது புலப்படும்.
1969 மே மாதக் கலவரங்களுக்குப் பின்னர் மலேசியாவில் வீதிப் போராட்டங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டன. யாரும் அவ்வாறு ஏற்பாடு செய்வதற்கோ, நடத்துவதற்கோ அச்சப்பட்டனர்.
மகாதீர் பிரதமராக இருந்த காலத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு எதிராக கடுமையான விதிமுறைகள், காவல் துறையினரின் கட்டுப்பாடுகள் என்ற வடிவத்தில் கடைப்பிடிக்கப்பட்டன.
1998ஆம் ஆண்டில், மகாதீர் அன்வார் இப்ராகிமை பதவியிலிருந்து நீக்கி, கைது செய்து சிறையில் அடைத்தபோதுதான், முதன் முதலாக வீதிப் போராட்டத்தை உருவாக்கினார் அன்வார் இப்ராகிம்.
அப்போது முதல், வீதிப் போராட்டங்கள், அமைதியான முறையில் திரண்டு மக்கள் போராடுவது என்பதெல்லாம், மலேசிய மக்களின் வாழ்க்கை முறைகளில் ஒன்றாகவே இப்போது வரை மாறிவிட்டது.
ஆனால், இதில் அதிசயம் என்னவென்றால், மகாதீர் எப்போதும் இதுபோன்ற வீதிப் போராட்டங்களை, பிரம்மாண்ட மக்கள் போராட்டங்களை, எதிர்த்துக் குரல் கொடுத்து வந்தவர் என்பதுதான்.
ஆனால், இன்று பிரதமர் நஜிப் சர்வாதிகாரத்தனமான முடிவுகள் எடுத்து, ஜனநாயகத்திற்கு கொஞ்சமும் மதிப்பு தராமல், மக்கள் எண்ண ஓட்டங்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் கால கட்டத்தில்,
அவரை எதிர்த்துப் போராட – பதவி விலக நெருக்குதல் கொடுக்க – வீதிப் போராட்டமே சிறந்த வழிமுறை என மகாதீரே மனம் மாறி, அந்த வீதிப் போராட்டத்தில் அவரே நேரடியாக இறங்கி விட்டார்.
மகாதீருக்கு எதிரான கடுமையான குறை கூறல்கள் குற்றச்சாட்டுகள் எத்தனையோ இருந்தாலும், சரியான முறையில் வியூகம் வகுத்து அரசியல் முடிவுகள் எடுப்பதில் அவருக்கு நிகர் அவர்தான் என்பதை பல முறை நிரூபித்திருக்கின்றார்.
அந்த வகையில், எத்தனையோ கடுமையான இன்னல்கள், இடையூறுகளுக்கு இடையில், காவல் துறையினரின் கெடுபிடிகளுக்கு ஈடுகொடுத்து, பெர்சே போராட்டத் தலைவர்கள், ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேரை ஒன்று திரட்ட, அங்கு வந்து மக்களோடு மக்களாக அவர்களோடு கலந்து, அவர்களின் உணர்வோடு ஒன்றி, இந்த அற்புத தருணத்தைப் பயன்படுத்தி ஹீரோவாகி விட்டார், மகாதீர்.
தனது நடவடிக்கையால், தனது கடந்த கால அரசியல் தலைமைத்துவத்தின் சில கறைபடிந்த பக்கங்களை, திருத்தியும் எழுதிக் கொண்டுள்ளார் என்று கூட கூறலாம்.
அந்த வகையில் பெர்சே 4.0 –இன் ஹீரோ – கதாநாயகன் – துன் மகாதீர்தான்!
– இரா.முத்தரசன்