ஜோகூர்- அரண்மனை விவகாரங்களில் அரசியல் பிரமுகர்கள் தலையிடக் கூடாது என்றும், அரண்மனையுடன் தொடர்புடைய அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்றும் ஜோகூர் சுல்தான் எச்சரித்துள்ளார்.
அண்மையில் சிலர் வெளியிட்ட அறிக்கைகளில் ஆணவத் தொனி தென்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
“இது அனைத்து அரசியல்வாதிகளுக்குமான எச்சரிக்கை. அவர்களில் கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினரும் அடங்குவார். மேலும் எனது மகனை அடிக்க வேண்டும் என்று சொன்னவர்களும் உண்டு. இப்படிப்பட்ட தலைவர்களை நாம் மதிக்க வேண்டுமா?” என்று சுல்தான் இப்ராகிம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்கந்தர் மலேசியாவுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பில் வெளிநாட்டைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர், அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டார் என கெம்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் தெங்கு புத்ரா ஹாரோன் அமினுரஷிட் தெங்கு ஹமிடி கூறியதாக தகவல் வெளியானது.
சிங்கப்பூர் வர்த்தகர் பீட்டர் லிம்மின் சேவெரஸ் குழுமமும், ஜோகூர் சுல்தானின் மகன் துங்கு அப்துல் ரஹ்மானும் இணைந்து பாதுகாப்பு சேவையளிக்கும் தொழிலில் ஈடுபட இருப்பதாக கடந்த மார்ச் மாதம் தகவல் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசியல்வாதிகளை எச்சரிக்கும் விதமாகப் பேசியுள்ளார் சுல்தான் இப்ராகிம்.