Home Featured உலகம் சிங்கை தமிழ் நூல்கள் மின்மயம்! “எல்லாரும் தமிழ் தாத்தாக்கள்தான்”!

சிங்கை தமிழ் நூல்கள் மின்மயம்! “எல்லாரும் தமிழ் தாத்தாக்கள்தான்”!

1341
0
SHARE
Ad

சிங்கப்பூர் – ‘மெல்லத் தமிழினி சாகும்…’ என்ற கவிஞனின் கவலைக்கு இனி வாய்ப்பு இருக்காது என்றே தோன்றுகின்றது, அண்மையக் காலமாக தமிழ் மொழி மூலம் இணையத்தில் நடந்து வரும் புதிய மாற்றங்களையும், அதிசயப்பட வைக்கும் முன்னேற்றங்களையும் பார்க்கும்போது!

இணையத்தில் தமிழ், தன் அழகான கால்களை பதித்த நாள்தான், “மெல்லத் தமிழினி சாகும்” என அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்றொடரும் ஒரு முடிவுக்கு வந்த நாள் எனலாம்!

Tamil Digital Books - Singapore - launching

#TamilSchoolmychoice

மின்மரபுடமைத் திட்டத்தின் தொடக்கம் – சிங்கை துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (வலது) அமைச்சர் ஈஸ்வரன் (சிவப்பு சட்டையில்) – மற்றும் பிரமுகர்கள் 

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதுதான் தமிழர்களின் கனவாக இருக்க முடியும். அந்தக் கனவு மெல்ல மெல்ல நிறைவேறிக் கொண்டிருக்கிறது. இந்த கம்பீரமான தருணத்தில் இணையவெளியில் வெற்றிவலம் வந்து கொண்டிருக்கும் தமிழுக்கு அழகு மகுடம் சூட்டியுள்ளனர் சிங்கப்பூர் தமிழர்கள்.

இணையத்தில் தமிழ் இலக்கியங்களை, தமிழினம் சார்ந்த வரலாற்றுத் தகவல்களை இடம்பெறச் செய்யும் முயற்சிகள் நீண்டகாலமாகவே நடைபெற்று வருகின்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் தங்களால் இயன்ற அளவு இந்த நற்காரியத்தைச் செய்து வருகின்றனர்.

சிக்காகோ பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பணி

அந்த வகையில் கோட்டையூர் ரோஜா முத்தையா, தம் வாழ்நாளில் சேகரித்த பல்வேறு அரிய நூல்கள் அடங்கிய நூலகத்தை வாங்கி, அதிலுள்ள நூல்கள் அனைத்தையும், அனைவரும் பார்த்துப் பயனடையும் வகையில் நுண்படமாக (மைக்ரோ ஃபிலிம்) மாற்றி, நடமாடும் நூலகம் ஒன்றை அமைத்தது சிக்காகோ பல்கலைக்கழகம். இந்த வகையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களை உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் பார்த்துப் பயன்பெற முடியும்.

உலகத் தமிழ்ச் சமுதாயத்துக்கு இதைவிட பன்மடங்கு பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தரக்கூடிய சாதனை இப்போது சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.

மின்மயமாக்கும் திட்டம்

சிங்கப்பூரின் கடந்த 50 ஆண்டு கால தமிழ் இலக்கியத்தை ‘ஓசிஆர்’ (OCR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னிலக்கமாக்கும் சீரிய பணியைச் செய்துள்ளனர்.

இந்த மின்னிலக்க தொகுப்பின் வெளியீடு ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்றது. சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 50ஆவது ஆண்டை அந்நாட்டு மக்கள் விமரிசையாக கொண்டாடிய நேரத்தில், தமிழ்ச் சமூகத்துக்கு இந்த மின்னிலக்கத் தொகுப்பை பரிசாக அளித்துள்ளனர் சிங்கப்பூர் அரசாங்கத்தினர்.

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 350 தமிழ் இலக்கிய நூல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பணி நடந்து வந்துள்ளது. சுமார் 300 தொண்டூழியர்கள் இந்தத் திட்டத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, தமிழுக்காகவும், தமிழ் இலக்கியத்தை பாதுகாக்கும் உன்னத நோக்கத்துடனும் பல மணி நேரம் உழைத்துள்ளனர்.

Tamil Digital books - Launch - Cultural event -

தொடக்க விழா நிகழ்ச்சியின் இடையில் நடைபெற்ற நடனக் கலைநிகழ்ச்சிகள்

இனி சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை உலகின் எந்த மூலையில் இருப்பவரும், எந்த நேரத்திலும் விரல் நுனியில் பெறலாம். அட்சய பாத்திரம் போல் அள்ள அள்ள குறையாமல் இலக்கியத்தைச் சுவைக்கலாம்.

கடல் கடந்து சென்ற இடத்திலும் தமிழ் இலக்கியம் தொய்வடைந்து விடாமல் கட்டிக்காத்த சிங்கப்பூர் தமிழர்களின் இலக்கியப் படைப்புகள் இப்போது இணையத்தில் ஆவணப் பெட்டகமாக இடம்பெற்றுள்ளன. மின்னிலக்க தொகுப்பில் உள்ள நூல்கள் காலம் உள்ள வரை நிலைத்திருக்கும்.

கடந்த சனிக்கிழமை ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான தர்மன் சண்முகரத்னம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். இந்த அரிய தமிழ் மின்வளத்தை அந்நாட்டு அரசின் சார்பில் அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்டார்.

அருண் மகிழ்நன்

arun-mahizhnan-Singaporeஇந்நிகழ்ச்சியில் பேசிய, தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அருண் மகிழ்நன் (படம்), இத்திட்டமானது சிங்கப்பூர் தமிழர்களின் வரலாறு, பண்பாடு, படைப்புத்திறன் ஆகியவற்றை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் பொக்கிஷம் என்றார்.

“ஊர் கூடினால்தான் தேர் நகரும் என்று சொல்வார்கள். ஊர் கூடியது, தேரும் நகர்ந்தது. எனவே ஊருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். நான் இந்த திட்டத்தின் தலைவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டு உங்கள் முன்னால் நின்று கொண்டிருந்தாலும், எனக்குப் பின்னால் ஏறத்தாழ 300 பேர் வடம் பிடித்துக் கொண்டு வந்தனர் என்பதை தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்” என்று அருண் மகிழ்நன் கூறினார்.

எந்தவொரு கலாச்சாரமும் கடவுளின் அருளால் மட்டும் வாழ்ந்து விடாது என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5 விழுக்காடு மட்டுமே உள்ள சிறிய சமூகத்தின் மொழி, இலக்கியம், கலாச்சாரம் ஆகியன, அந்தச் சமுதாயம் உரிய முயற்சிகளை மேற்கொண்டால் மட்டுமே பிழைத்து, தழைத்து நீடிக்கும் என்பது சிங்கப்பூர் தமிழ் உலகத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும் என்றார்.

“கடந்த 50 ஆண்டுகளில் தமிழ் இலக்கிய நூல்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தாலும், அவற்றுக்கு விற்பனைச் சந்தையில் மிகக் குறைந்த ஆதரவு அல்லது அறவே ஆதரவற்ற நிலைதான் காணப்படுகிறது. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் மட்டுமே பெரும்பாலான தமிழ் இலக்கிய படைப்புகளைக் காண முடிகிறது” என்றும் மகிழ்நன் குறிப்பிட்டார்.

“இந்நிலை குறித்து அழுது அரற்றுவதைக் காட்டிலும், இந்நூல்களுக்கு மின்னிலக்க (டிஜிட்டில்) வடிவில் புதிய வாழ்வு அளிப்பதென முடிவு செய்தோம். இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு முன்னர் இத்திட்டம் தொடங்கியது. இதற்காக பெரியவர்களிடம் 50 சிங்கை டாலர்கள், சிறியவர்களிடம் 2 டாலர்கள் என நன்கொடை வசூலிக்கப்பட்டது,” என்று கூறிய அருண் மகிழ்நன், இந்தத் திட்டத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம்

Tharman-Shanmugaratnam-இதையடுத்துப் பேசிய சிங்கப்பூர் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் (படம்), கடந்த நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் ஓலைச்சுவடிகள் வடிவில் வாழ்ந்த தமிழ் இலக்கியங்கள் பல அழியும் நிலையில் இருப்பதைக் கண்டு, அவற்றை புத்தகங்களாக அச்சிட்டு காப்பாற்றி, தமிழுக்குச் செய்த சேவையை குறிப்பிட்டார்.

“தன் வாழ்நாளில் சுமார் 50 ஆண்டுகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு இந்த அரிய பணியை மேற்கொண்டார் தமிழ்த் தாத்தா. இன்று நாம் செயல்படுத்தும் இந்தத் திட்டம் அளவில் சிறியதாக இருந்தாலும், தமிழ்த் தாத்தாவின் அதே ஆத்மார்த்த உணர்வுடன் ஒத்துப் போகக்கூடிய ஒன்றாகும். நூற்றுக்கணக்கானோர் இந்த திட்டத்திற்காக தங்களை அர்ப்பணித்து, பல மாதங்கள், ஒவ்வொரு வாரமும் பல மணி நேரம் உழைத்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகால இலக்கியங்களுக்கு தற்போது கிடைத்திருப்பது புது வாழ்வு மட்டுமல்ல, நீடித்த வாழ்வும் கூட. அச்சு வடிவ புத்தகங்கள் காலத்தால் அழிந்து போகும், கவனிக்காமல் விடப்பட்டால் மாயமாகும். எனவே இந்தத் திட்டத்தின் செயல்பாடுகள் தொடரும் என நம்புகிறேன்,” என்றார் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம்.

தமிழ் அறிந்தோருக்கு மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள சில நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால், ஒட்டுமொத்த தேசமும், ஒரு சிறிய சமுதாயத்தின் இலக்கியங்களால் பலனடையும் என்றார் அவர்.

இந்தத் திட்டத்திற்கு தமிழ் மற்றும் இந்தியச் சமுதாயத்தினர் மட்டுமல்லாமல், மலாய், சீனம் உள்ளிட்ட பிற இனத்தவர்களும் நன்கொடை அளித்திருப்பது உற்சாகமளிக்கிறது என்று தர்மன் சண்முகரத்னம் நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.

இந்த அரும்  பணியில் ஈடுபட்டவர்கள் இது சிறிய முயற்சி என்று சொல்வது அவர்களின் தன்னடக்கம். ஆனால் இந்த மின்னிலக்க தொகுப்பு இணைய உலகில் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய அடையாளம். ஓலைச்   சுவடியிலிருந்த தமிழைப் புத்தக வடிவமாக்கிய உ.வே.சா அவர்களை ‘தமிழ்த் தாத்தா’ என்கிறோம்.

புத்தக வடிவில் இருந்த தமிழை இலக்கியல் எனப்படும் டிஜிட்டல் வடிவத்தில் மாற்றிய இவர்கள் ஒவ்வொருவரும் தமிழ் தாத்தாக்களேதான்! அதில் என்ன சந்தேகம்?

இந்தத் திட்டத்திற்காக உழைத்தவர்கள் திடமாய்… திமிராய்… இரு உள்ளங்கை அழுந்த கை குலுக்கிக் கொள்ளலாம். ஒரு கை எடுத்து மறுதோள் தட்டலாம்… சட்டைக் காலரையும்,  மிச்சம் வைக்க வேண்டாம். தூக்கி விட்டுக் கொள்ளலாம்.

வாழ்த்துகள் சிங்கைத் தோழர்களே!

-தொகுப்பு: சதீஷ் பார்த்திபன்