Home Featured உலகம் “சிங்கப்பூர்த் தமிழ் 2015” – தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டம்!

“சிங்கப்பூர்த் தமிழ் 2015” – தமிழின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டம்!

1191
0
SHARE
Ad

singapore-tamil-2015சிங்கப்பூர் – நாட்டின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன்றாக அங்கீகரித்ததோடு நில்லாமல், தமிழ் மொழியைப் பரப்புவதிலும், நிலைநிறுத்துவதிலும், அதன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் பல முனைகளிலும் சிங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கி வருவது அனைவரும் அறிந்ததுதான்.

அந்த வகையில் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகளைக் கொண்டாடிய தருணத்தில் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் “தமிழ் மின் மரபுடமைத் திட்டம்”. இந்தத் திட்டத்தின்படி, சிங்கப்பூரின் 50 ஆண்டு கால வரலாற்றில் வெளியிடப்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளையும், எழுத்துப் படிவங்களையும் மின்னியல் தொகுப்பாக ஆவணப்படுத்தும் திட்டம் இதுவாகும்.

arun_mahizhnanசிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகத்தின், சிறப்பு ஆராய்ச்சிகளுக்கான ஆலோசகர் அருண் மகிழ்நனின் (படம்) முயற்சி, திட்டமிடுதல், தலைமைத்துவம் ஆகியவற்றின் காரணமாக இந்தத் திட்டம் ஒரு முழுமையான வடிவத்தைப் பெற்றுள்ளது. அருண் மகிழ்நன் தமிழ் மின் மரபுடமைத் திட்டம், மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் 2015 ஆகிய திட்டங்களின் ஆலோசகராகச் செயல்படுகின்றார்.

#TamilSchoolmychoice

அடுத்த திட்டம் ‘சிங்கப்பூர்த் தமிழ் 2015’

ஆனால் இத்துடன் நின்றுவிடாமல் தமிழ் மின் மரபுடமைத் திட்டக் குழுவினர் தங்களின் அடுத்த கட்ட முயற்சியாக முன்னெடுத்திருக்கும் திட்டம்தான் ‘சிங்கப்பூர்த் தமிழ் 2015’.

இந்தத் திட்டத்தின் முதல் கட்ட மின்னியல் தொகுப்பு, கடந்த டிசம்பர் திங்கள் 18ம் தேதி தேசிய நூலக வாரியக் கட்டடத்தில், கல்வி அமைச்சின் தாய்மொழிகள் பிரிவைச் சேர்ந்த துணை இயக்குநர் திருவாட்டி சாந்தி செல்லப்பன் அவர்களால் வெளியிடப்பட்டது.

சிங்கப்பூர்த் தமிழ் 2015 என்னும் இத்திட்டம் பொதுவிடங்களில் தமிழின் பயன்பாட்டை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படுத்தும் முயற்சியாகும். சிங்கப்பூரின் பொன்விழாவையொட்டித் தமிழ்ச் சமூகத்திற்கு அர்ப்பணிக்கப்படும் ஒரு திட்டம் இதுவாகும்.

இதனால் பயனடைவோர் யார் என்று பார்த்தோமானால், பல்வேறு தளங்களில் தமிழின் பயன்பாட்டைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பும் ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழில் மொழிமாற்றம் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள விரும்பும் மொழிபெயர்ப்பாளர்கள், சிங்கப்பூரில் தமிழ்மொழியின் பயன்பாடு எவ்வாறு மாறி வந்துள்ளது என்பதைப் பதிவுசெய்ய விரும்பும் வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சியில் அக்கறைகொண்டோர் என பலதரப்பட்ட மக்களையும் சென்றடையும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும் திட்டமாக இது திகழ்கின்றது.

tamil-digital-project-singaporeசிங்கப்பூர்த் தமிழ் 2015 திட்டம், சிங்கப்பூர்த் தமிழ் சார்ந்த மின் வளங்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ் மின்மரபுடைமைக் குழுவின் செயல் திட்டங்களுள் ஒன்று. இந்த வரலாற்றுத் தொகுப்புகள், நீண்ட காலப் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி நிகழ்காலத் தேவைகளையும் நிறைவேற்ற உருவாக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் அரசாங்கமும் நாட்டிலுள்ள வேறுபல நிறுவனங்களும் தமிழைப் பல்வேறு வகைகளில் பயன்படுத்திவருகின்றன. ஆனால் அந்தப் பயன்பாடு எவ்வளவு பரவலானது என்பதை யாரும் அறிந்தாரில்லை. அந்தப் பயன்பாட்டை ஆவணப்படுத்தும் கன்னி முயற்சி இது.

சிங்கப்பூர்த் தமிழ் 2015, சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று 50ம் ஆண்டு நிறைவு ஆண்டான 2015ல் பொது இடங்களில் உள்ள தமிழ்ப் பயன்பாட்டைப் பிரதிபலிப்பதாகும். இத்திட்டம், முழுமையானதோ பரவலானதோ அன்று. நூற்றுக்கணக்கான பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறு பகுதியே ஆகும். இருப்பினும், பன்மொழிக் கொள்கை பற்றிப் பெருமிதம்கொள்ளும் சிங்கையில் தமிழின் பரவலான பயன்பாட்டை இந்த முன்னோடித் தொகுப்பு பறைசாற்றுகிறது. சிங்கப்பூரின் பொது இடங்களில் தமிழின் பயன்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த எண்ணமுள்ளது.

இத்திட்டம், பல முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. இது, பல்வேறு சூழல்களில் தமிழ்மொழி எவ்வாறெல்லாம் புழங்கப்பட்டுள்ளது என்பதை வகுப்பறையில் கற்பிக்க உதவும் கருவூலமாக இருக்கும். தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்கள் கடந்த கால மொழிபெயர்ப்புகளிலிருந்து கற்றுக்கொள்ளச் சிறந்ததொரு வழிகாட்டித் தொகுப்பாகவும் விளங்கும். அது மட்டுமின்றி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்படும் வரலாற்று ஆவணமாகவும் திகழும்.

முழுதும் தொண்டூழியர்களைக் கொண்ட பணிக் குழு, இத்திட்டத்தின் முதற்கட்டத்தை முடிப்பதற்கு ஓராண்டு எடுத்துக்கொண்டது.

சிங்கப்பூர்த் தமிழ் 2015 திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை கீழ்க்காணும் இணையத் தள இணைப்பில் காணலாம்:

http://www.singaporetamil2015.sg/