Home One Line P2 சிங்கையின் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் நிறைவு கண்ட சாதனை

சிங்கையின் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் நிறைவு கண்ட சாதனை

935
0
SHARE
Ad
சிங்கப்பூர் மின்மரபுடைமைத் திட்ட நிறைவு விழாவில் அமைச்சர்கள் தர்மன் சண்முகரத்னம், ஈஸ்வரன் ஆகியோருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர்

சிங்கப்பூர் – காலம் எவ்வளவு விரைவாக நம்மைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதற்கான இன்னொரு உதாரணம், சிங்கப்பூர் 50 ஆண்டுகால தமிழ் இலக்கியங்களை மின்னிலக்கமாக்கும் (டிஜிட்டல்) ‘தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்’ இனிதே நிறைவடைந்திருப்பது!

கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி 2013-ஆம் ஆண்டு நமது செல்லியல் ஊடகத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

சிங்கப்பூர் 2015-ஆம் ஆண்டில் தனது 50-வது சுதந்திரப் பொன்விழா ஆண்டைக் கொண்டாடுவதை முன்னிட்டு அதன் 50 ஆண்டுகால தமிழ் இலக்கியங்களை மின்னிலக்கமாக்கி நாட்டுடமையாக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்த செய்திதான் அது!

#TamilSchoolmychoice

12 அக்டோபர் 2013-இல் நடைபெற்ற அதற்கான நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் சிங்கை அமைச்சர் ஈஸ்வரன் கலந்து கொண்டு அதிகாரபூர்வமாக இத்திட்டத்தைத் தொடக்கி வைத்தார்.

1965-இல் சிங்கப்பூர் சுதந்திரம் பெற்றது முதல் 2015-ஆம் ஆண்டு  வரையில் அங்கு வெளியான அனைத்து தமிழ் இலக்கியங்களையும் மின்னிலக்கமாக உருமாற்றம் செய்து, நிரல்படுத்தி அந்நாட்டில் வாழும் தமிழ் சமூகத்திற்குஅன்பளிப்பாக வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அத்துடன் உலகத் தமிழர்கள் சிங்கை இலக்கியங்கள் பற்றி அணுகித் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பையும் இந்தத் திட்டம் ஏற்படுத்தித் தரும்.

தற்போது சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவின் ஆலோசனைக் குழுத் தலைவராக இருக்கும் அருண் மகிழ்நன் இந்த சிங்கை மின்மரபுடைமைத் திட்டத்திற்கு தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.

தமிழ் மின்மரபுடைமைக் குழு வழி நடத்திய இத்திட்டத்திற்கு தேசிய நூலக வாரியம், தேசிய மரபுடைமைக் கழகம், தேசிய கலை மன்றம், சிங்கப்பூர் புத்தக மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் சிங்கை எழுத்தாளர்கள், சமூகத் தலைவர்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

2015-இல் இலக்கியங்களை மின்னிலக்கமாக்கும் திட்டம் நிறைவு

மரபுடைமைத் திட்ட நிறைவு விழாவின்போது தர்மன் சண்முகரத்னத்துடன் ஏற்பாட்டுக் குழுவினர்

கால ஓட்டத்தில் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி இதன் தொடர்பில் மற்றொரு செய்தியை செல்லியலில் வெளியிட்டிருந்தோம்.

மின்மரபுடைமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கையின் 50 ஆண்டுகால உள்ளூர் தமிழ் இலக்கியங்களை ‘ஓசிஆர்’ (OCR) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னிலக்கமாக்கும் சீரிய பணியைச் செய்து முடித்துள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி.

இந்த மின்னிலக்க தொகுப்பின் வெளியீடு 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற்றது. சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 50ஆவது ஆண்டை அந்நாட்டு மக்கள் விமரிசையாக கொண்டாடிய நேரத்தில், தமிழ்ச் சமூகத்துக்கு இந்த மின்னிலக்கத் தொகுப்பை பரிசாக அளித்துள்ளனர் சிங்கப்பூர் அரசாங்கத்தினர்.

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மின்மரபுடமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் சிங்கை துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம். அமைச்சர் ஈஸ்வரனும் அதில் கலந்து கொண்டார்.

தமிழ் மின்மரபுடைமைத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 350 தமிழ் இலக்கிய நூல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த இப்பணியில் சுமார் 300 தொண்டூழியர்கள் இந்தத் திட்டத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, தமிழுக்காகவும், தமிழ் இலக்கியத்தை பாதுகாக்கும் உன்னத நோக்கத்துடனும் பல மணி நேரம் உழைத்துள்ளனர்.

இந்தத் திட்டம் முழுமையடைய ஆறாண்டுகள் ஆகும் என்றும் அதன்படி 2013-இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2019-இல் நிறைவைக் காணும் என்றும் அப்போது அறிவிக்கப்பட்டது.

இதோ செல்லியலில் சிங்கை மின்மரபுடமை குறித்த அடுத்த மகிழ்ச்சி தரும் செய்தி!

இந்தத் திட்டம் நிறைவைக் கண்டு விட்டது என்பதோடு அதற்கான நிறைவை விழா கடந்த சனிக்கிழமை நவம்பர் 30-ஆம் தேதி அதே அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது என்ற செய்திதான் அது.

சிங்கை மின்மரபுடைமைத் திட்டத்தின் நிறைவு விழா

மின்மரபுடைமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சிங்கை தமிழ்க் கலைகளை மின்னிலக்க வடிவில் ஆவணப்படுத்தும் முயற்சி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு அதன் நிறைவும் கடந்த நவம்பர் 30 நிகழ்ச்சியோடு கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் மின்மரபுடைமைத் திட்டம் தமிழ் சமூகத்தின் பங்களிப்பைப் பிரதிபலிப்பதாகவும், சிங்கையின் அனைத்து இனத்தவருக்குமான கலாச்சாரப் பொக்கிஷமாகத் திகழ்வதாகவும் பெருமையுடன் குறிப்பிட்டார்.

சிங்கையின் இலக்கியம், மேடை நாடகம், இசை, நடனம் என அனைத்து கலாச்சாரக் கூறுகளும் தற்போது மின்னிலக்க ஆவணங்களாக உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அமைச்சர் ஈஸ்வரன் உரையாற்றுகிறார்

இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய சிங்கையின் தகவல் தொடர்பு அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் “மின்மரபுடைமைத் திட்டத்தின் மூலம் நமது வரலாற்றுப் பதிவுகளும், தரவுகளும் பாதுகாக்கப்படுவதோடு, நமது சுய பாரம்பரியத்தை ஆராய்வதிலும் கொண்டாடுவதிலும் தனிநபர்களை ஊக்குவிக்கின்றன. மேலும் சமூகக் குழுவால் இத்திட்டம் தொடங்கப்பட்டது மனநிறைவைத் தருகிறது. பல்வேறை துறைகளைச் சார்ந்தவர்களை அணுகி ஆவணங்களைத் திரட்டியுள்ளதும் மகிழ்ச்சியைத் தருகிறது” என்று தெரிவித்தார்.

பிரபல எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்களின் நன்கொடைகள்தான் சிங்கப்பூர் தமிழ்க் கலைகள் குறித்த விலைமதிப்பற்ற களஞ்சியத்தை சாத்தியமாக்கியுள்ளது என ஈஸ்வரன் தனதுரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அருண் மகிழ்நன் உரையாற்றுகிறார்

ஆறாண்டுகளில் நான்கு மின்தொகுப்புகளை உருவாக்கிய இந்தத் திட்டத்தின் தலைவர் அருண் மகிழ்நன் நிகழ்ச்சியில் உரையாற்றும்போது “அரசு என்ன செய்யும் என எதிர்பார்க்காமல் சமூகத்திற்கும் அரசுக்கும் நாம் என்ன செய்ய முடியும் என நாம் முன்வைத்த கேள்வியின் பயனே மின்மரபுடைமைத் திட்டத்தின் வெற்றியும், நிறைவுமாகும். இந்த வெற்றிக்கு மூலதனமாக அமைந்தது துடிப்பான குடிமைச் செயல்பாடுதான்” என்று குறிப்பிட்டார்.

நிறைவு நிகழ்ச்சி குறித்துக் கருத்துரைத்த தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவின் தலைவர் அழகிய பாண்டியன் “திட்டம் தொடங்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் ஏறத்தாழ 350 நூல்களை மின்னிலக்கமாக்கும் பணியை நிறைவு செய்தோம். அதைத் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் மேடை நாடகம், இசை, நடனம் என இந்த மின்தொகுப்புத் திட்டம் முழுமை பெற்றது” என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

மின்மரபுடைமைத் திட்டத்தின் நிறைவு விழாவில் “சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாடு : வேர்களும் வழித்தடங்களும்” என்ற தமிழ்ப் பண்பாடு குறித்த இணையத் தளமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழ்ப் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் காட்டும் விதத்திலும், கொண்டு செல்லும் விதத்திலும், 14 தமிழ் ஆசிரியர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பாடுபட்டு இந்த இணையத் தளத்தை உருவாக்கியுள்ளனர்.

-இரா.முத்தரசன்