அக்டோபர் 13 – சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு, இளைய சமுதாயம் பயனடையும் வகையில் மின்பதிப்புகளாக மாற்றும் புதிய திட்டமொன்றை சிங்கப்பூர் அரசாங்கம் தொடங்கியுள்ளது.
இந்த திட்டத்திற்கு சிங்கப்பூரின் தேசிய மரபுடைமைக் கழகம் தலைமை வகிக்க, தேசிய கலை மன்றம், சிங்கப்பூர் தேசிய புத்தக மேம்பாட்டுக்கழகம், சிங்கப்பூர் தேசிய நூலகம், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோர் துணை புரிகின்றனர்.
இந்த மின்னிலக்க மரபுடைமைத் திட்டம் வரும் 2015 ஆம் ஆண்டு நாடு முழுவது அமலுக்கு வரும் என்றும், சிங்கப்பூரின் 50 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சிங்கப்பூரின் பிரதமர் துறை அமைச்சரான எஸ்.ஈஸ்வரன் கூறுகையில், “இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் சிங்கப்பூரின் 50 ஆண்டு கால தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தையும் மின்பதிப்புக்களாக மாற்றுவதாகும். அதன் மூலம் சிங்கப்பூரின் இளைய சமூதாயத்தினருக்கும், உலகம் முழுவதும் இந்த திட்டம் போய் சேரும் வகையிலும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் 50 வது சுதந்திர தினம்
சிங்கப்பூர் தனது 50 வது சுதந்திர தின விழாவை வரும் 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கிறது.
வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த தருணத்தைக் கொண்டாட சிங்கப்பூர் இந்திய சமூகம் திரு.அருண்மகிழ்நன் தலைமையின் கீழ் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தை மின்னிலக்கமாவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இந்த முன்னோடியான முயற்சிக்கு சிங்கப்பூர் அரசாங்கமும் ஊக்கம் அளித்து ஆதரவு நல்குகிறது.