கோலாலம்பூர், அக்டோபர் 12 – இன்று பரபரப்புடன் நடைபெற்ற அம்னோ கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பகுதிகளின் தேர்தல் முடிவுகளின் படி, கைரி ஜமாலுடின் மீண்டும் இளைஞர் பகுதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேளையில், அம்னோ மகளிர் பகுதித் தலைவியாக நடப்பு தலைவியும் முன்னாள் அமைச்சருமான ஷாரிசாட் அப்துல் ஜாலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் 191 தொகுதிகளிலிருந்து முடிவுகள் இன்று மாலை முதல் வரத் தொடங்கின. அதிகாரபூர்வமற்ற தகவல்களின்படி கைரி 115 வாக்குகளைப் பெற்றிருந்த வேளையில் ஷாரிசாட் 98 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
கைரியை எதிர்த்துப் போட்டியிடும் சைட் ரோஸ்லி ஹார்மான், அக்ரம்ஷா முவாமார் உபைடா சனுசி, இர்வான் அம்பாக் காலிட் இசார் மற்றும் அப்துல் கரிம் அலி ஆகிய நால்வருக்கும் இதுவரை வாக்குகள் எதுவும் பதிவாகவில்லை.
26 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கும் ஷாரிசாட்டை எதிர்த்துப் போட்டியிடும் டத்தோ மஸ்னா மஸ்லான் மற்றும் ரெய்ஹான் சுலைமான் ஆகிய இருவருக்கும் இதுவரை வாக்குகள் எதுவும் விழவில்லை.
அதே வேளையில் புத்ரி அம்னோவின் தலைவராக எர்மியாத்தி சம்சுடின் வெற்றி பெறுவார் என்றும் பத்திரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.