Home Featured நாடு சினிமா பாணியில் கெவின் மொராய்ஸ் மர்மக் கொலை – 5 சந்தேக நபர்கள் கைது!

சினிமா பாணியில் கெவின் மொராய்ஸ் மர்மக் கொலை – 5 சந்தேக நபர்கள் கைது!

924
0
SHARE
Ad

Kevin Moraisகோலாலம்பூர் – கெவின் மொராய்ஸ் கொலை தொடர்பில் 22 வயது முதல் 52 வயது வரையிலான 5 சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவன் மொராய்ஸ் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்பு கொண்டவன் – அவன்தான் மொராய்ஸ் சடலம் இருந்த எண்ணெய் பீப்பாயை குறிப்பிட்ட இடத்தில் வீசியிருக்கின்றான்.

அந்த சந்தேக நபர் மூலம் தங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தாங்கள் சடலம் உறைய வைக்கப்பட்டிருந்த எண்ணெய் பீப்பாயைக் கண்டெடுத்ததாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுப் பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சாலே தெரிவித்திருக்கிறார்.

பழிவாங்கும் செயலா?

#TamilSchoolmychoice

ஒரு பழிவாங்கும் செயலாக மொராய்சின் கடத்தல் கருதப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஓர் இராணுவ மருத்துவருக்கு எதிரான ஊழல் வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக கெவின் மொராய்ஸ் வழக்காடி வந்தார். இந்த வழக்கின் தொடர்பில்தான் மொராய்ஸ் கடத்தப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் நம்புகின்றனர்.

Kevin Morais52 வயதுடைய அந்த மருத்துவரும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருக்கின்றார். சந்தேக நபர்கள் இதுவரை பெயர் குறிப்பிடப்படவில்லை.

ஷா ஆலாம் நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், இராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் ஊழல் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.

கார்கள் கைப்பற்றப்பட்டன

ஐந்து சந்தேக நபர்களும் ரவாங் மற்றும் கோலாலம்பூர் வட்டாரங்களில் இருந்து கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் ஒரு மிட்சுபுஷி டிரிட்டோன், ஒரு ஹோண்டா அக்கோர்ட், ஒரு புரோட்டோன் பெசோனா ஆகிய கார்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. பினாங்கில் ஓர் இடத்தில் சிமெண்ட் மற்றும் கான்கிரிட் உருவாக்குவதற்குத் தேவைப்படும் பொருட்கள் வாங்கப்பட்டதற்கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

அந்த டிரிட்டோன் கார்தான் கெவின் மொராய்சின் அரசாங்கக் காரின் மீது அவர் கடத்தப்பட்டபோது செப்டம்பர் 4ஆம் தேதி மோதியிருக்கின்றது. அதற்கு அடுத்த நாள்தான் (செப்டம்பர் 5) மொராய்சின் மூத்த சகோதரர் மொராய்ஸ் காணவில்லை எனப் புகார் கொடுத்திருக்கின்றார்.

கைது செய்யப்பட்டவர்களிடம் கூலிப் பணம்….

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 32,100 ரிங்கிட் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பணம் மொராய்ஸ் கடத்தப்பட்டதற்கான கூலிப் பணமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

மொராய்ஸ் கொலை சம்பவத்தில் ஒரு பெண்மணியும், ஒரு குழந்தையும் கூட தடுத்து வைக்கப்பட்டனர் என்றாலும், அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பிருக்க வாய்ப்பில்லை எனக் காவல் துறையினர் கூறியிருக்கின்றனர்.

கோலாலம்பூர் பொது மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும் கெவின் மொராய்சின் சடலம், ஒரு சாக்குப் பையில் சுற்றித் திணிக்கப்பட்டிருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Kevin morais

இதுவரை கிடைத்த தகவல்கள், மேற்கொள்ளப்பட்ட கைதுகள் மூலம் மொராய்ஸ் கொலைக்கும் 1எம்டிபி ஊழல் விவகாரத்திற்கும், மற்றும் 2013இல் நிகழ்ந்த அராப் மலேசியன் டெவலப்மெண்ட் வங்கி நிறுவனர் ஹூசேன் அஹ்மாட் நஜாடி கொலைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது

மொராய்ஸ் கொலை தொடர்பில் மேலும் சில பேர் கைது செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி சிகாம்புட்டில் உள்ள தனது மெனாரா டூத்தா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து புத்ரா ஜெயாவிலுள்ள தனது அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு செல்ல முற்பட்டபோதுதான் மொராய்ஸ் கடைசியாக உயிருடன் பார்க்கப்பட்டார்.

அடுத்த நாள் அவரைக் காணவில்லை என அவரது மூத்த சகோதரர் காவல் துறையில் புகார் செய்தார்.Kevin - Morais - Burnt car -

முழுவதும் எரிந்த நிலையில் கெவின் மொராய்ஸ் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் ஹூத்தான் மெலிந்தாங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது

அதைத்தொடர்ந்து நாட்டு மக்களின் மொத்த கவனமும் மொராய்ஸ் மீது பதிந்தது. அவர் பயன்படுத்தியதாக நம்பப்படும் கார் ஹூத்தான் மெலிந்தாங் பகுதியில் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரது மறைவின் பின்னணியில் மேலும் மர்மங்களும், தேடுதல்களும் கூடத்தொடங்கின.

அவரது கொலையைத் துப்பு துலக்கி வந்த காவல்துறை குழுவினர், இன்று காலை, எண்ணெய் பீப்பாய் ஒன்றில் கான்கிரிட் சிமெண்டில் உறைந்து கிடந்த ஒரு சடலம் சுபாங் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த சடலம் மொராய்சாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

கொஞ்ச நேரத்தில் அந்த சடலம் மொராய்ஸ்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கோலாலம்பூரின் முக்கிய சாலைகள், ஹூத்தான் மெலிந்தாங் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி ஒளிப்பதிவு புகைப்படக்கருவிகள் (சிசிடிவி கேமராக்கள்) ஆகியவற்றின் மூலமாக காவல் துறையினர் தேவைப்பட்ட முக்கிய தடயங்களைப் பெற்றிருக்கின்றனர்.

மஞ்சள், சிவப்புப் பேரணிகள், 1எம்டிபி, என பலதரப்பட்ட சூடான விவகாரங்களுக்கு மத்தியிலும் ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது கெவின் மொராய்ஸ் காணாமல் போன விவகாரம்.

அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மக்களின் நிம்மதிப் பெருமூச்சு ஒருபுறம் – இன்னொரு புறத்தில் அவரது கடத்தல் – கொலை – என மற்ற மர்ம முடிச்சுகளும் அவிழத் தொடங்கியிருக்கின்றன.

இனி இரண்டாவது கட்டமாக ஏன் இந்த கொலை? இதன் பின்னணி என்ன என்பதுபோன்ற மர்மங்களும் அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கும்.

வெளிவரப்போகும் சுவாரசியங்களுக்கும், மர்மங்களின் விடைகளுக்காகவும்  காத்திருப்போம்!

-இரா.முத்தரசன்