கோலாலம்பூர் – மலேசியாவில் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக குழந்தைகள் கடத்தப்படுவது தொடர் கதையாகிவிட்டது. நேற்று கடத்தப்பட்ட காஜாங் சிறுவன் அதிருஷ்டவசமாக மீண்டும் பெற்றோரிடம் சேர்ந்துவிட்டான். ஆனால் இதற்கு முன் நடந்த பல கடத்தல் சம்பவங்களில், அப்பெற்றோருக்கு அந்த அதிர்ஷ்டம் அமையவில்லை. ஆம்.. கடத்தப்பட்ட பல குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட பல துயரச் சம்பவங்களும் மலேசியாவில் நடந்துள்ளன.
அன்பையும், பாசத்தையும் கொட்டி வளர்க்கும் குழந்தைகள் நம் கண்ணெதிரே கடத்தப்படும் போது பெற்றோரின் மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பிள்ளைகளைப் பறிகொடுத்துவிட்டுத் தவிப்பது வாழ்க்கையே முடிந்துவிடுவது போன்ற நரக வேதனை.
இது போன்ற கடத்தல் சம்பவங்களில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதற்கான சில அடிப்படைத் தகவல்களை இக்கட்டுரையில் காணலாம்.
1. உங்கள் கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்
எப்போதும் குழந்தைகளை உங்களது கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி. அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது குறித்து உங்களுக்கு தொடர்ந்து தகவல் கூறச் சொல்லுங்கள். நவீன வசதிகள் வந்துவிட்ட இந்தக் காலத்தில் தகவல் மட்டும் சொல்லும் படியான ஒரு சிறிய போன் ஒன்று அவர்கள் கையில் இருப்பது நன்று.
2. முடிந்தவரையில் அவர்களைத் தனியாக விடாதீர்கள்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதோ, ஏதாவது வகுப்புகளுக்கு அனுப்பும் போதோ முடிந்தவரையில் அவர்களைத் தனியாக அனுப்புவதைத் தவிருங்கள். ஆயிரம் வேலைகள் நமக்கு இருந்தாலும் அவர்கள் விசயத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். வீட்டிலோ, சொந்தத்திலோ யாராவது ஒரு நம்பிக்கையான நபருடன் அனுப்பி வையுங்கள். அசட்டையாக இருந்துவிட்டு பின்னால் குழந்தையை எண்ணி வாடி, குற்ற உணர்வில் தவிப்பதை விட கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது எவ்வளவோ மேல்.
3. அந்நியர்களிடம் எச்சரிக்கை
குழந்தைகளை வணிக வளாகம், பொது இடங்கள் ஆகியவற்றுக்கு அழைத்துச் செல்கையில், அந்நியர்கள் அவர்களை அனுகும் போது கட்டாயம் கவனம் தேவை. அதில் நல்லவர்களும் இருப்பார்கள், தீயவர்கள் இருப்பார்கள். என்றாலும், பொதுவாக அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். தவறான கண்ணோட்டத்தோடு அந்நியர்கள் தொடும் பட்சத்தில் அது குறித்து உடனடியாக உங்களிடம் தெரிவிக்கும் படி குழந்தைகளை விழிப்புணர்வோடு வளர்க்க வேண்டும்.
உதாரணமாக, வணிக வளாகங்களில் விளையாட்டு மையங்கள் போன்றவற்றில் உங்கள் குழந்தைகளிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். அந்த சமயங்களில் குழந்தைகளை விளையாடவிட்டுவிட்டு நிறைய பெற்றோர்கள் கைப்பேசியில் மூழ்கிப் போவதைக் காண முடிகிறது. அதை முற்றிலும் தவிர்த்துவிட்டு அவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். காரணம், குழந்தைகள் கடத்தல் ஒருபுறம் இருக்க, விளையாடும் போது அவர்கள் விழுந்து காயம் ஏற்படக் கூட வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளை அழைத்துச் செல்லும் பெற்றோர் வழக்கத்தை விடக் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது மிக மிக அவசியம். யாராவது உங்களது காரை நிறுத்தி முகவரி கேட்பது, உதவி கேட்பது போன்றவை ஏற்பட்டால், அடித்துப் பிடித்து காரைவிட்டு இறங்கிவிடாதீர்கள். முதலில் ஒரு சில நிமிடங்கள் உங்களை நிதானப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த ஒரு சில நிமிட நிதானமின்மை தான் கடத்தல்காரர்களுக்கும், திருடர்களுக்கும் சாதகமாக அமைந்துவிடுகிறது.
4. பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கவனம்
உலகமே பேஸ்புக், இண்ஸ்டாகிராம், டுவிட்டர், வாட்சாப் என ஆகிவிட்ட நிலையில், குழந்தைகள் மீதான நமது அன்பையும், பாசத்தையும் நம்மையறியாமல் அவற்றில் பதிவுகளாக செய்து வருகின்றோம்.
குழந்தை முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் அழகை, அப்பாவுடன் விளையாடும் அழகை, வீட்டில் செல்லும் களேபரங்களை, புதிதாக வாங்கிய சைக்கிளை ஓட்டுகையில் என சகட்டு மேனிக்கு அப்பிஞ்சுகளைப் படம் பிடித்து பேஸ்புக், இண்ஸ்டாகிராமில் பதிவு செய்கின்றோம்.
அதுவரையில் சரி.. ஆனால் .. “என் குழந்தைக்கு ‘பாஸ்போர்ட்’ கிடைத்துவிட்டது” என்று அதை அப்படியே படம் பிடித்துப் போடுவது, எந்தப் பள்ளியில் படிக்கிறார் என்று முகவரி உட்பட பதிவு செய்வது, “ஐ மிஸ் மை டார்லிங்” என்று பள்ளி சுற்றுலா செல்லும் குழந்தையைக் கட்டியணைத்த படி பேஸ்புக்கில் பதிவு செய்வது போன்றவை, கடத்தல்காரர்களுக்கு நீங்களே உங்களையறியாமல் கொடுக்கும் குறிப்புகள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
5. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும்
குழந்தைகளின் மனநிலை, நடவடிக்கைகள், குணாதிசயங்களில் திடீர் மாற்றங்கள் போன்றவற்றை உடனடியாக கண்டறிவது பெற்றோரின் கடமை. வழக்கத்திற்கு மாறாக அவர்களிடத்தில் அதிக அளவிலான சந்தோசமோ அல்லது அதிக அளவிலான சோகமோ இருந்தால் உடனடியாக அவர்கள் கவனிக்கப்பட வேண்டும்.
ஆண் குழந்தையானாலும், பெண் குழந்தையானாலும், அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகனமோட்டிகள், பள்ளியின் பாதுகாவலர்கள் என அனைவரிடத்திலும் உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, எப்போதும் குழந்தைகளின் மீது உங்களுக்கு அதிக கவனம் இருப்பதைக் காட்டுங்கள். இதனால் அவர்களில் தவறான எண்ணம் கொண்டவர்கள் கூட உங்களை எண்ணி அஞ்சி குழந்தைகளிடத்தில் நெருங்கமாட்டார்கள். அதே வேளையில், அவர்களில் நல்லவர்கள் உங்களது குழந்தையின் மீது கூடுதல் அக்கறை காட்டுவார்கள்.
எந்த ஒரு விசயத்தையும் வெளிப்படையாக உங்களிடத்தில் கூறும் படி, குழந்தைகளுடன் அன்போடு, நட்போடு பழக வேண்டும். தேவையான நேரத்தில் கண்டித்த பின், அவர்களை அருகில் அழைத்து சமாதானப்படுத்துவது, பிடித்ததை வாங்கித் தருவது அவர்களுக்கு ஓர் பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.
6. தேவையான கட்டுப்பாடுகளை விதியுங்கள்
பொதுப் பாதுகாப்பு குறித்து உங்கள் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டியது மிகவும் அவசியம். உங்களின் கைப்பேசி எண்கள், அருகிலுள்ள காவல்நிலையத்தின் தொடர்பு எண் போன்றவற்றை அவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் படி கற்றுக் கொடுங்கள். அதே வேளையில், கடத்தல்காரர்கள் பற்றியும், எப்படி கடத்துவார்கள் என்பது பற்றியும் அவர்களிடம் பக்குவமாக எடுத்துக் கூறுங்கள்.
“நான் இருக்கேன் ஐயா உனக்கு. அப்பா சொல்றபடி சரியா நடந்துக்க. உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது” என்று தைரியம் கூறுங்கள். காரணம், கடத்தல்காரர்களின் கதைகளைக் கேட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியில் இறங்கவே அவர்களுக்குப் பயம் வந்துவிடக் கூடாது. பக்குவமாக பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கும் போது அவர்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்வார்கள்.
வெளிநபர்களுடன் பேசுவது, நண்பர்கள் வீட்டிற்குச் செல்வது, குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் போது மற்றவர்களை அனுமதிப்பது போன்றவற்றில் தேவையான கட்டுப்பாடுகளை அவர்களுக்கு விதியுங்கள்.
இவையெல்லாம் தங்களது கண்மணிகளைப் பாதுகாத்துக் கொள்ள பெற்றோர் பின்பற்ற வேண்டிய அவசியமான விசயங்கள் ஆகும்.
முந்தைய, தலைமுறை விளையாடுவதற்காக எடுத்துக் கொண்ட பரப்பளவு மிகவும் அதிகம். 2 வயதாகும் போதே, பக்கத்துவீட்டுக் குழந்தைகளையோ அல்லது உடன்பிறந்தவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு வீதியில் இறங்கி விளையாடச் சென்றது அந்தக் காலம்.
தோட்டப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஆங்காங்கே உள்ள டீக்கடை, மளிகைக் கடை என ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் கடைகளில் உள்ளவர்களுக்கு அவர்களது கடைக்கு வரும் குழந்தைகள், அச்சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், அங்கு விளையாடும் குழந்தைகள் யார் வீட்டுக் குழந்தைகள் என்பது நன்றாகத் தெரியும். நடந்து வரும் குழந்தை சற்று தவறி விழுந்தாலும், முதல் ஆளாக ஓடிச் சென்று தூக்குபவர்கள் அவர்களாக இருந்தனர். ஒருவருக்கொருவர் சொந்தங்களாக ஒற்றுமையாக வாழ்ந்தது ஒருகாலம்.
தற்போது வசதி வாய்ப்புகள் பெருகிவிட்டன. அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரித்துவிட்டன. ஆனால் நம்மில் பெரும்பாலானவர்கள் இன்று அண்டை வீட்டுக்காரர் யார் என்று கூடத் தெரிந்து கொள்ள விரும்பாமல், 700 சதுர அடி வீட்டில், கதவைத் தாழிட்டுக் கொண்டு, எந்திரமாக காலத்தைக் கடத்தி வருகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மை.
-செல்லியல்