Home Featured கலையுலகம் தேர்தலுக்கு காரணமான ஒப்பந்தத்தை முன்பே ரத்து செய்த சரத்குமார்!

தேர்தலுக்கு காரணமான ஒப்பந்தத்தை முன்பே ரத்து செய்த சரத்குமார்!

815
0
SHARE
Ad

sarathkumarசென்னை – பல்வேறு களேபரங்களுடன் நடிகர் சங்கத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தல் ஏற்படுவதற்கு காரணமான பாண்டவர் அணியன் முக்கிய கோரிக்கைய சரத்குமார் கடந்த மாதமே நிறைவேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அதனை அறிவிக்கலாம் என்று காத்திருந்த சரத்குமார், அதனை தோல்வி முகத்துடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

சென்னையில் நேற்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த சரத்குமார், பல்வேறு ஊழல் நடந்துள்ளதாகக் கூறப்பட்ட எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, கடந்த மாதம் 29-ம் தேதியே ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். மேலும் அதற்கான ஆதாரத்தையும் அந்த சந்திப்பில் வெளியிட்டார்.

தான் தலைவராக இருந்த போது நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்ட அவர், தன் மீது சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் தான் மிகுந்த மன வேதனை அடைந்ததாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “நடந்து முடிந்த தேர்தல் மூலம் தென்னிந்திய நடிகர் சங்கம் உலகம் முழுவதும் புகழ்பெற்று விட்டது. நடிகர் சங்கத்தில் என்ன நடந்தாலும் அது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களை சென்றடைகின்றது.”

“தேர்தலின்போது எதிரணியினரால் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும், முறைகேடுகளும் சுமத்தப்பட்டன, அவை என்னை மிகவும் காயப்படுத்தி விட்டன. 33 ஆண்டுகள் பொது வாழ்க்கையிலும், நடிகர் சங்கப் பொறுப்புகளிலும், ஒரு கட்சியின் தலைவராகவும் தூய்மையானவனாக வாழ்ந்து வருகிறேன். என்மீது நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகுந்த வலியை ஏற்படுத்தியது.”

“அதனால் எஸ்.பி.ஐ. சினிமா நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்த ஒப்பந்தம் போட்டது மூலம் எனக்கு ஏற்பட்ட வலிகளையும், காயங்களையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு சம்மதித்தார்கள்.”

“கடந்த செப்டம்பர் 29–ம் தேதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான கடிதம் அனுப்பப்பட்டது. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இதன்மூலம், என் மீதான களங்கத்தை துடைத்துவிட்டதாக கருதுகிறேன்.”

“இதை கடந்த வாரம் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலேயே வெளியிட இருந்தேன். அப்போது கூறியிருந்தால், இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று எதிரணியினர் கூறிவிடுவார்கள் என்றும், அதுவே உங்களுக்கு தேர்தலில் பலவீனமாகிவிடும் என்றும் நண்பர்கள் கூறினார்கள். எனவேதான், அன்று ஒப்பந்தத்தை ரத்து செய்த விவரத்தை கூறவில்லை. தேர்தலில் வெற்றி பெற்றபின் இதை அறிவிக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.”

“ரத்து செய்த ஒப்பந்தத்தை எங்கள் அணியில் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராம்கி மூலம் இப்போது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நாசரிடம் ஒப்படைக்க இருக்கிறேன். என் மீதான ஊழல் குற்றச்சாட்டு இனிமேல் நிறுத்தப்பட்டுவிடும். நான் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் வெளியேற விரும்பவில்லை” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.