Home Featured நாடு இந்த நாடாளுமன்றத் தொடரில் என்னவெல்லாம் நடக்கலாம்?

இந்த நாடாளுமன்றத் தொடரில் என்னவெல்லாம் நடக்கலாம்?

523
0
SHARE
Ad

Parliamentகோலாலம்பூர் – நேற்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடர் எப்போதும் இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம், அந்த அளவுக்கு நாட்டைச் சூழ்ந்துள்ள அரசியல் விவகாரங்கள்.

இந்த நிலையில் எந்த மாதிரியான விவகாரங்கள் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஆக்கிரமிக்கும் என்பது குறித்து ஒரு பார்வை பார்ப்போமா?

1. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி கிடைக்குமா?

#TamilSchoolmychoice

அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கும் முதல் விவகாரம் நஜிப்புக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம்.

Najib-Semenyih-1mdb-5 Julyதனது 6 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் நஜிப் மிகக் கடுமையான சோதனையை எதிர்கொண்டுள்ளார். அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் இம்முறை முன் அறிவிக்கை (நோட்டீஸ்) அளித்துள்ளனர்.

இம்முறை முன்மொழியப்பட்டுள்ள 28 தீர்மானங்களில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் 25ஆவது தீர்மானமாகும். இத்தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு சபாநாயகர் அனுமதி அளிப்பாரா என்பதே இப்போது எழுந்ததுள்ள முக்கிய கேள்வி.

ஒருவேளை அவர் அனுமதி அளித்தாலும், எதிர்க்கட்சிகளின் நோக்கம் வெற்றி பெற மேலும் 25 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.

பொதுவாக அரசுத்தரப்பில் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால், எதிர்க்கட்சிகள் கொண்டு வர நினைக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அவைத் தலைவர் அனுமதி அளிக்காமல், விவாதத்துக்கே கொண்டுவரப்படாமல் ஒதுக்கித் தள்ளப்படலாம்.

2. வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) அறிக்கையால் புயல் கிளம்புமா?

Budget 2016இந்த ஆண்டிற்கான வரவு செலவு நிதிநிலை அறிக்கையும் நஜிப்புக்கு சோதனையாக அமையக்கூடும். கூட்டரசு நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்படுமானால், அதுவும் கிட்டத்தட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதைப் போன்றதுதான்.

எனினும் 124 உறுப்பினர்களைக் கொண்டுள்ள தேசிய முன்னணி சிக்கலின்றி நிதிநிலை அறிக்கைக்கு அவையின் ஒப்புதலைப் பெற்றுவிட இயலும். அதேசமயம் நஜிப் மீது அதிருப்தியில் உள்ள தேசிய முன்னணி எம்.பி.க்கள் அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்துக்கு வேண்டுமென்றே வராமல் போனால், பிரதமருக்கு அதுவும் பெரும் சிக்கல்தான்.

3. 1எம்டிபி குறித்து பொது கணக்குக் குழு தொடர்ந்து விசாரணை நடத்துமா?

இது மூன்றாவது முக்கிய கேள்வி. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக ரொம்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் அரிஃபின் பொறுப்பேற்ற பின்னர், தொடர்ந்து 1எம்டிபி விவகாரம் குறித்து அக்குழு விசாரணை நடத்துமா எனும் கேள்வியும், எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஏனெனில் ஹாசான் அரிஃபின் நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டு 5 மாதங்களே ஆகிறது.

1MDBபொதுவாக நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு உறுப்பினர் என்றால் நாடாளுமன்றத்தில் நீண்ட காலம் பணியாற்றி அனுபவம் பெற்ற ஒருவரைத்தான் போடுவார்கள்.

ஆனால் நஜிப்போ, 5 மாதங்களுக்கு முன்னர்தான் தனது தயவால், சிபாரிசால் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கொண்டு வந்து, 1எம்டிபி விவகாரம் சூழ்ந்துள்ள நிலையில் அவரை பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக ஆக்கியிருக்கின்றார்.

இந்த முடிவும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது.

கடந்த ஜூலை மாதம் பொதுக் கணக்குக் குழுவின் 4 தேசிய முன்னணி உறுப்பினர்களை தனது அமைச்சரவையில் நஜிப் சேர்த்துக் கொண்ட பின்னர், அதன் செயல்பாடுகள் நிலைகுத்திப் போயின.

4. டிரான்ஸ் பசிபிக் கூட்டமைப்பு ஒப்பந்தம் 

பலருக்குப் புரியாத ஒன்று என்றாலும், வணிக வட்டாரங்களில் பலத்த எதிர்பார்ப்பையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருக்கும் 12 நாடுகளின் கூட்டமைப்பு செய்திருக்கும் வணிக ஒப்பந்தம் இது.

இதன் மூலம் மலேசியாவின் வணிக பலம் அதிகரிக்கும் என்றாலும், இன்னொரு புறத்தில் அரசாங்கத்தின் பூமி புத்ரா கொள்கைகள் தளர்த்தப்படலாம் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

TPPA-Trans-Pacific-Partnership-Agreementஆனால், மற்ற நாடுகளுடனான வணிகத்தில் ஏற்படப்போகும் வாய்ப்புகளினால், நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் 5 சதவீதம் அதிகரிக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

பசிபிக் கடல் பகுதியைச் சுற்றியுள்ள 12 நாடுகளுக்கிடையில் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளின் பயனாக, கடந்த அக்டோபர் 5ஆம் தேதி அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னால், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.

இந்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்த இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன என்பதால், இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 1 எம்டிபி போன்ற மற்ற சர்ச்சைகளுக்கு மத்தியில், இந்த ஒப்பந்தம் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்படாது என்ற கருத்தும் நிலவுகின்றது.

ஆனால், அப்படிச் சமர்ப்பிக்கப்பட்டால், பலத்த விவாதங்களையும், சர்ச்சைகளையும் இந்த ஒப்பந்தம் உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

5. 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் மேலும் கடுமையாக்கப்படுமா?

Internet Imageஇணையவெளிக்  கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் கடந்த 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தில் சில முக்கிய விதிமுறைகளை சேர்க்க தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு பரிந்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இணைய பயன்பாட்டாளர்கள் – குறிப்பாக சமூக வலைதளத் பயனாளர்கள் மற்றும் இணைய வலைப்பதிவர்கள் ஆகியோரின், இணையத் தளங்களை மேலும் கட்டுப்படுத்த முடியும் என அந்த அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6. மீண்டும் ஹுடுட் சட்ட மசோதாவா?

Hadi Awang PAS Presidentகடந்த இரு நாடாளுமன்ற கூட்டத் தொடர்களின் போதும், கிளந்தானில் ஹுடுட் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஸ் கட்சி மேற்கொண்டது. எனினும் இதற்கான சட்டமசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான விவாதம் நடக்கும் முன்பே அம்முயற்சி நீர்த்துப்போனது.

இந்த முறை பாஸ் கட்சித் தலைவர் ஹாஜி ஹாடி அவாங் (படம்) மீண்டும் அத்தகைய ஒரு முயற்சியை மேற்கொண்டு மீண்டும் நாட்டில் ஒரு சர்ச்சைக்குரிய விவாதத்துக்குப் பாதை போடுவாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

7. நாடாளுமன்ற இருக்கை ஒதுக்கீடுகளில் மாற்றம்

Palanivelஇதற்கிடையில், இம்முறை தேசிய முன்னணியிலும், எதிர்க்கட்சிகளிலும் ஏற்பட்டுள்ள சில மாற்றங்கள் காரணமாக, நாடாளுமன்றத்தில் அக்கட்சி உறுப்பினர்களின் இருக்கைகளிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், ஷாபி அப்டால் இருவரும் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் வேறு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பக்காத்தானில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அதன் முன்னணித் தலைவர்கள் அருகருகே அமர வாய்ப்பில்லை.

டத்தோஸ்ரீ பழனிவேல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதால், அவருக்கும் வேறு இருக்கையே ஒதுக்கப்படும்.

8. நாடாளுமன்ற விவகார அமைச்சர்களின் பொறுப்புகளில் மாற்றம்

azalina_othman-கடந்த ஜூலையில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, நாடாளுமன்ற விவகார அமைச்சராக இருந்த ஷாஹிடான் காசிமுக்குப் பதிலாக, அசாலினா ஒத்மான் (படம்) நியமிக்கப்பட்டார்.

காசிமைவிட ஓத்மான் சற்றே துடிப்புடன் செயல்படக்கூடியவர் எனும் கருத்துண்டு. நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கான கட்டடத்தில் இருந்து அவர்கள் வேறு கட்டடத்துக்கு மாற வேண்டும் என அவர் முன்பு உத்தரவிட்டிருந்தார்.

ஊடகங்களின் கடும் எதிர்ப்பையடுத்து, இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது என்றாலும், ஆகஸ்ட் மாத நாடாளுன்றத்தின் செயல்பாட்டை அவர் மாற்றியமைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

-செல்லியல் தொகுப்பு