கோலாலம்பூர் – ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் தனது தலைமுடிக்கு புதிதாக தங்க நிறத்தில் வர்ணம் பூசியிருப்பது இளைஞர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கும் அதே நேரத்தில், ஒரு சில தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஆனால் ஜோகூர் இளவரசரோ, தன்னைப் பற்றி விமர்சனம் செய்பவர்களை எண்ணி தான் கவலைப்படப் போவதில்லை என துணிச்சலாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
தனது புதிய சிகையலங்காரத்தைப் படம் பிடித்து நேற்று இரவு தனது பேஸ்புக் பக்கமான ‘ஜோகூர் சதர்ன் டைகர்சில்’ பதிவு செய்தார்.
இந்நிலையில் அது குறித்துக் கருத்துக் கேட்ட செய்தியாளர் ஒருவரிடம், “இது என் தலைமுடி. நான் ஒரு வேடிக்கைக்காக அவ்வாறு செய்தேன். நாளை அதை நீல நிறத்திலோ அல்லது சிவப்பு நிறத்திலோ மாற்றுவேன் அல்லது மொட்டை கூட அடிப்பேன். அது என்னுடைய தனிப்பட்ட விவகாரம்” என்று இளவரசர் பதிலளித்துள்ளார்.
மேலும், “இது நிரந்தரமாக இருக்கப்போவதில்லை. விரைவில் கருப்பு நிறத்தில் மாற்றுவேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படப் போவதில்லை. கடவுளால் மட்டும் தான் எனக்கு நீதி வழங்க இயலும்” என்றும் இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த உலகத்தில் அவரவர் தங்களது வேலையைப் பார்த்துக் கொள்வது தான் சிறந்த வேலை ஆகும்” என்றும் இளவரசர் தெரிவித்துள்ளார்.