Home Featured நாடு பழனிவேல் தரப்பினரின் மேல்முறையீடு: நாளை கூட்டரசு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்குமா?

பழனிவேல் தரப்பினரின் மேல்முறையீடு: நாளை கூட்டரசு நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்குமா?

900
0
SHARE
Ad

Mic1_Lபுத்ரா ஜெயா – சங்கப் பதிவகத்தினர் தங்களின் அதிகாரத்திற்கு மீறிய வகையில் செயல்பட்டதாக பழனிவேல் தரப்பினர், சங்கப் பதிவகத்திற்கு எதிராகத் தொடுத்துள்ள சீராய்வு மனு (Judicial Review) வழக்கின் மேல்முறையீடு கூட்டரசு நீதிமன்றத்தில் நாளை அக்டோபர் 21ஆம் தேதி முதல் கட்ட விசாரணைக்கு வரும்.

கேஸ் மேனேஜ்மெண்ட் – அதாவது வழக்கு நிர்வாகமுறை – என்ற நடைமுறையின் கீழ் கடந்த மாதம் விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் மேல் முறையீட்டு விசாரணையை கூட்டரசு நீதிமன்றம் தொடர்ந்து நடத்த, முன் அனுமதி வழங்கப்படுமா? என்பது குறித்த வழக்கு விசாரணை முதல் கட்டமாக நாளை நடைபெறும்.

நாளை நடைபெறப் போகும் விசாரணையின் போது தான்  கூட்டரசு நீதிமன்றம் முன் அனுமதி வழங்குவதா? இல்லையா? என்ற முடிவைச் செய்யும்.

#TamilSchoolmychoice

அவ்வாறு முன் அனுமதி வழங்கப்படவில்லை என்றால், டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்திற்கு எதிராகவும், சங்கப் பதிவகத்திற்கு எதிராகவும் கடந்த சில மாதங்களாக பழனிவேல் தரப்பினர் நடத்தி வரும் நீதிமன்றப் போராட்டம் இறுதியாக ஒரு முடிவுக்கு வரும்.

மலேசிய நீதிமன்ற நடைமுறைகளின் படி ஒரு வழக்கின் உச்ச மேல்முறையீட்டின் இறுதி நீதிமன்றம் கூட்டரசு நீதிமன்றம்தான்!

மாறாக, கூட்டரசு நீதிமன்றம் பழனிவேல் தரப்புக்கு முன் அனுமதியை வழங்கும் என்றால் அதன் பின்னர்தான் வழக்கின் முறையான விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு கூறும்.

மஇகா பொதுப் பேரவையும் தேர்தலும்…

இதற்கிடையில் வரும் எதிர்வரும் அக்டோபர் 25ஆம் தேதி மஇகாவின் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசியத் துணைத் தலைவர், மூன்று உதவித் தலைவர்கள், 23 மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும்.

எனவே, நாளை, அப்படியே கூட்டரசு நீதிமன்றத்தின் முன் அனுமதி கிடைத்தாலும், அதன் பின்னர் வேறொரு நாளில்தான் பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள மேல்முறையீட்டு வழக்கின் முழு விசாரணை நடைபெறும்.

அதற்குள்ளாக மஇகாவின் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு விடுவார்கள் என்பதால், கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதனால் டாக்டர் சுப்ராவின் தலைமைத்துவத்திற்கோ, மஇகாவுக்கோ எந்தவித தாக்கமும் ஏற்படாது என்றே வழக்கைக் கண்காணித்து வரும் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் ஜோகூர் மஇகாவின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.பாலகிருஷ்ணன் சார்பில் டத்தோ வி.மனோகரன் பிரதிநிதிக்கின்றார்.

டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் சார்பாக வழக்கறிஞர் தயாளன் பிரதிநிதிக்கின்றார்.

இதனிடையே, நாளை நீதிமன்றத்தில் எடுக்கப்படும் முடிவு தான் இறுதிக்கட்ட முடிவு என்பதால், தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வருமா? அல்லது கூட்டரசு நீதிமன்றம் அதிரடியாக எதுவும் தீர்ப்பு வழங்கிவிடுமா? என்று பழனிவேல் தரப்பினர் சற்று கலக்கத்துடன் காத்திருப்பதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.