புது டெல்லி – தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொருத்தவரை இந்தியா என்றால் தனிப்பட்ட பிரியம் இருக்கத்தான் செய்கிறது. எந்த புதிய தொழில்நுட்பத்தையும் மிக எளிதாக கையாளும் இந்தியர்களின் திறமை, மற்ற நாடுகளை விட இளைஞர்களை அதிக அளவு கொண்டிருக்கும் மக்கள் தொகை. இவை தான் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவை வலம் வருவதற்கான முக்கியக் காரணங்களாக இருக்கும்.
அப்படி உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு தொழில்நுட்ப நிறுவனம் தான் பேஸ்புக். அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் இன்று இந்தியாவிற்கு வருகை தந்திருந்தார். அவர் வழக்கமாக நடத்தும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் இந்திய மாணவர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு அசரடித்தனர். அவரும் மாணவர்களின் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார்.
இந்த நிகழ்வில் மார்க்கின் முக்கியத்துவம் வாய்ந்த பதில்கள் கீழே:
பேஸ்புக்கில் புதிய மாற்றம்
பேஸ்புக்கில் எதிர்கால மாற்றம் குறித்த கேள்விக்கு மார்க்கின் பதில், “5 முதல் 10 வருடங்களில் பேஸ்புக்கில் சிறந்த முறையில் மொழிமாற்றம் செய்து, அனைவரும் அனைத்து மொழிகளையும் புரிந்துகொள்ளும் வகையில், கணிப்பொறி அமைப்புகளை மாற்ற எண்ணியிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இனி தவறான பதிவுகள் இருக்காது
பயனர்களின் மனதை நோகடிக்கும் தவறான பதிவுகளை தடுக்கும் நெறிமுறைகளை உருவாக்கி வருகிறோம் என்று அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார்.
இந்தியா இல்லாமல் இணையம் இல்லை
இந்தியா குறித்து அவர் கூறுகையில், “இந்தியா மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு. இந்தியாவை புறக்கணித்து விட்டு உலக மக்கள் அனைவரையும் இணையத்தில் இணைக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் மட்டும் 13 கோடிக்கும் மேற்பட்டோர் பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். இவர்களை ஒன்றிணைத்தால், பேஸ்புக்கின் அடுத்த திட்டமான இன்டர்நெட். ஆர்க் (Internet.Org) நடைமுறைப்படுத்துவது மிக எளிதான ஒன்றாகிவிடும். அதனை முக்கிய குறிக்கோளாக எண்ணியே, மார்க் சக்கர்பெர்க்கின் இந்திய வருகை அமைத்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.