கோலாலம்பூர் – “எந்த வேட்பாளரையும் ஆதரிக்க மாட்டேன். கட்சித் தேர்தலில் நடுநிலை வகிப்பேன்” எனத் தொடர்ந்து அறைகூவல் விடுத்து வந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, மஇகா தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த உடனேயே – 30 பேர் கொண்ட மத்திய செயலவை உறுப்பினர்களைக் கொண்ட கொண்ட குழுவைத் தான் தேர்வு செய்துள்ளதாக அறிவித்தார்.
இது அவரது கடந்த கால நிலைப்பாட்டிலிருந்து மாறுபடுவதாக எடுத்த எடுப்பில் தோன்றினாலும், பின்னர் அவர் அதற்கென தந்திருக்கும் விளக்கம் மஇகா பேராளர்களிடையே ஏற்புடைய வகையிலேயே அமைந்திருப்பதாக மஇகாவின் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
“எனது தலைமையின் கீழ் அமையவிருக்கும் மத்திய செயலவை, அனைத்து மாநிலங்களையும் சமச்சீரான வகையில் பிரதிநிதிக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என விரும்புகின்றேன். அந்த அடிப்படையில்தான் மஇகாவின் உறுப்பினர் பலத்திற்கேற்ப, ஒவ்வொரு மாநிலத்திற்கும் இத்தனை மத்திய செயலவை உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என நான் நிர்ணயித்துள்ளேன். அதற்காகத்தான் 30 பேர் கொண்ட ஓர் அணியைத் தேர்வு செய்துள்ளேன்” என டாக்டர் சுப்ரா வேட்புமனுத் தாக்கல் முடிந்த பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் அறிவித்தார்.
தொடர்ந்து அடுத்த நாள் திங்கட்கிழமையே கெடா, பினாங்கு மாநிலங்களில் தொடங்கி, பல மாநிலங்களிலும் தனது மத்திய செயலவை அணிக்காகத் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் சுப்ரா.
சுப்ராவின் பிரச்சாரம் என்ன?
அவர் அறிவித்த அவரது அணியில் ஒருவர் மட்டும் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொள்ள, தற்போது அவரது அணியில் 29 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் இருந்து 23 பேரைத் தேர்ந்தெடுக்குமாறு அவர் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களில் பேராளர்களைக் கேட்டுக் கொள்கின்றார்.
“நான் தேர்வு செய்திருக்கும் வேட்பாளர்கள் கூட, அவர்கள் எனது ஆதரவாளர்கள் என்பதால் மட்டும் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக, அவர்களுக்கிருக்கும் திறன்கள், கடந்த காலங்களில் அவர்கள் வழங்கியிருக்கும் சேவைகள், அண்மையில் நடந்த கட்சிப் போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய பணிகள் – கட்சி மீது காட்டிய விசுவாசம், போன்றவற்றின் அடிப்படையில்தான் அவர்கள் வேட்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும் டாக்டர் சுப்ரா தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் தெரிவித்து வருகின்றார்.
“நான் இவ்வாறு மத்திய செயலவை உறுப்பினர்களைத் தேர்வு செய்து தேர்தலில் முன்னிறுத்தாவிட்டால், பின்னர் சிலாங்கூர், பேராக் என ஒரு சில மாநிலங்களில் இருந்து மட்டும் அதிகமான மத்திய செயலவை வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதைத் தொடர்ந்து, ஒரு பாரபட்சமான சமநிலையற்ற மத்திய செயலவை அமைந்து விடும். அதனால், அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் இடம் பெறாமல் போய்விடும் என்பதோடு, மத்திய செயலவை எதிர்பார்த்தபடி, சரியான முறையில் செயல்பட முடியாது” என்றும் சுப்ரா தனது பிரச்சாரங்களில் வலியுறுத்தி வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து, அவரது விளக்கங்கள், மஇகா பேராளர்களிடையே நல்ல முறையில் வரவேற்பைப் பெற்று பரவி வருகின்றன என மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சுப்ராவின் மத்திய செயலவை வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற முடியுமா?
இதன் காரணமாக, சுப்ராவின் ஆசிபெற்ற அணியில் உள்ள பெரும்பாலான வேட்பாளர்களே மத்திய செயலவை உறுப்பினர்களாகத் தேர்வு பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இருப்பினும், அவரது அணியைத் தவிர்த்து மேலும் 15 பேர் கூடுதலாகப் போட்டியில் குதித்துள்ளனர். அவர்களில் சிலர் கடந்த காலங்களில் மத்திய செயலவை உறுப்பினர்களாக இருந்துள்ள காரணத்தாலும், மேலும் சிலர் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள காரணத்தாலும், அவர்களில் ஓரிருவர் மத்திய செயற்குழுவுக்கு வென்று வர முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசியத் தலைவர்களாக இருப்பவர்கள் எப்போதுமே தனக்கென ஓர் அணியைத் தேர்வு செய்து பிரச்சாரம் செய்தாலும் அவர்களில் ஓரிருவர் எப்போதும் தோல்வியடைவது வழக்கம் என பல மஇகா தேர்தல்களைச் சந்தித்துள்ள ஒரு மூத்த தொகுதித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மற்ற பதவிகளில் சுப்ரா தலையீடு இல்லை!
அதே வேளையில், தான் கலந்து கொள்ளும் கூட்டங்களில் தனது அணியில் இல்லாத மற்ற வேட்பாளர்களை சுப்ரா தடை செய்வதும் இல்லை. அவர்களும் மஇகா குடும்பத்தினர்தான், அவர்களும் பிரச்சாரம் செய்து கொள்ளட்டும் என திறந்த மனதோடு தனது பிரச்சாரக் கூட்டங்களில் அவர்களையும் அனுமதிக்கின்றார்.
ஆனால், மேடையில் தனது அணி வேட்பாளர்களை மட்டுமே அவர் பெயர் குறிப்பிட்டு அறிமுகம் செய்கின்றார், தனது அணியில் இல்லாத மற்ற வேட்பாளர்கள் கூட்டத்தில் இருந்தாலும் அவர்களை அவர் அறிமுகம் செய்வது இல்லை என இந்தப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2013ஆம் ஆண்டு கட்சித் தேர்தலிலும் அப்போதைய தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவும் இதே போன்றுதான் தனக்கென ஓர் அணியை உருவாக்கி முன்னிறுத்தினார். ஆனால், அதனை எங்குமே, எப்போதுமே பகிரங்கமாக அவர் அறிவிக்கத் துணியவில்லை.
ஆனால், டாக்டர் சுப்ராவோ, அதற்கு மாறாக, இதுதான், தான் தேர்தலில் முன்னிறுத்தும் அணி என்று பகிரங்கமாக அறிவித்துள்ளதோடு, ஏன் இத்தகைய ஓர் அணி தனக்குத் தேவைப்படுகின்றது என்பதற்கான வாதங்களை நியாயத்தோடு முன் வைத்திருக்கின்றார்.
இது, ஒரு நேர்மையான கட்சித் தேர்தலை நடத்த அவர் முற்பட்டுள்ளதைக் காட்டுவதாகப் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மஇகா தேசிய உதவித் தலைவர் வேட்பாளர்கள் ஜஸ்பால் சிங் – டி.மோகன் – எஸ்.ஏ.விக்னேஸ்வரன்…
அதே போன்று, தான் வழங்கிய உறுதி மொழிக்கேற்ப, தேசியத் துணைத் தலைவருக்கான தேர்தலிலும், தேசிய உதவித் தலைவர்களுக்கான தேர்தலிலும் எந்த ஒரு வேட்பாளரையும் ஆதரித்து சுப்ரா எந்தவித பிரச்சாரத்தையும் இதுவரை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மேற்கொள்ளவில்லை.
இனி அடுத்த கட்டமாக, அவரது அணியிலிருந்து எத்தனை பேர் மத்திய செயலவை உறுப்பினர்களாக உறுப்பினர்களாகத் தேர்வு பெறப்போகின்றார்கள் என்பதைக் காண கட்சியின் அனைத்து மட்டத்திலும், மஇகாவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சுப்ரா முன்மொழிந்திருக்கும் மொத்தமுள்ள 29 பேர்களில் இருந்து மட்டுமே 23 பேரும் மத்திய செயலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால், அதன்மூலம் கட்சியில் அவரது செல்வாக்கும், பலமும் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
-இரா.முத்தரசன்