ஜகார்த்தா – அபாயகரமான கரியமில வாயு வெளியீட்டில், இந்தோனேசியா உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்தோனேசியாவின் சுற்றுச் சூழல் இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டதற்கு காரணம் கடந்த இரண்டு மாதங்களாக அங்கு காடுகள் பற்றி எரிவதனால் தான் என உலக வளங்கள் நிறுவனம் (WRI) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த ஆறு வார காலத்திற்குள்ளாக இந்தோனேசியா, கரியமில வாயு வெளியீட்டில் உலக அளவில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. குறிப்பிட்ட இந்த காலத்தில் அந்நாட்டில் இருந்து வெளியான கரியமில வாயுவின் அளவீடு, பிரேசில் ஒரு ஆண்டில் வெளியிடும் அளவிற்கு சமமானதாக மாறியுள்ளது. இதனால், உலக சுற்றுச் சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் கிழக்கு ஆசியாவில் இந்த வருடத்தில் மட்டும் புகை மூட்டம் காரணமாக 500,000 பேர் சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தோனேசியாவில் மட்டும் 19 பேர் இதன் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில், பருவமழை மட்டுமே இந்தோனேசியாவையும், அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளையும் பாதுகாக்க முடியும் என்று டபிள்யூஆர்ஐ அமைப்பு தெரிவித்துள்ளது.