ஆக்ரா – உலக அளவில் மிக முக்கியமான காதல் சின்னமாக கருதப்படும் தாஜ் மாஹலை வானத்தில் இருந்து ரசித்தால் எப்படி இருக்கும். அப்படிப்பட்ட அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு அளிப்பதற்காக உத்திர பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை அற்புத ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
ஏர் பலூன்கள் மூலம் சுமார் 3000 அடி உயரத்தில், சுற்றுலாப் பயணிகளை தாஜ் மஹாலுக்கு மேலாக பறக்கச் செய்து அந்த அற்புத அனுபவத்தை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஏர் பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 14-16 விழாக் காலத்தை சிறப்பிக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலூன்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் பறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பானதாக இருக்கும் என உபி சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
தாஜ் மாஹலுக்கு மேலாக பலூன்களை பறக்க விடுவதற்கு இதுவரை அனுமதி மறுக்கப்பட்டு வந்தநிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது. நான்கு பேர் வரை பயணிக்கக் கூடிய இந்த ஏர் பாலூனில், ஒருவர் ஒருமுறை பயணம் செய்வதற்கு 8,000 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் அதிகமாக இருப்பது போல் தோன்றினாலும், இதுபோன்ற வாய்ப்புகள் மிக அரிதாக அமையும் என்பதால், சுற்றுலாப் பயணிகளும் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.