கோலாலம்பூர் – பிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எம்.கேவியஸ் நேற்று தனது கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருத்துக்கு மஇகா-வைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
மஇகா மத்திய செயலவை உறுப்பினர் வேள்பாரி, மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் சந்திரன் மற்றும் மஇகா மகளிர் பிரிவுத் தலைவர் மோகனா முனியாண்டி ஆகியோர் தனித்தனியாக கேவியசுக்கு எதிராக பத்திரிக்கை அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து டத்தோஸ்ரீ வேள்பாரி கூறுகையில், பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் முயற்சிகளுக்குத் துணை நின்று, தேசிய முன்னணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதை விடுத்து, கேவியஸ், தேசிய முன்னணியின் மற்ற கூட்டணிக் கட்சிகளைக் குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல், மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது வெற்று நகைச்சுவையாலும், ‘குறைவான புத்திசாலித்தனத்தாலும்’ சக மலேசியர்களை கேவியஸ், வேடிக்கை காட்டத் தவறியதே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவரை ஒரு மூத்த அரசியல் தலைவர் என்பதால் தாங்கள் மிகவும் மரியாதை அளித்து வருவதாகவும், அவர் பேசுவதற்கு முன்பு ஒரு 2 நிமிடங்களாவது யோசிக்க வேண்டும் என்றும் சிவராஜா தெரிவித்துள்ளார்.
மேலும், மஇகா மகளிர் பிரிவுத் தலைவி மோகனா முனியாண்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், மஇகா-விற்கு எதிராக கேவியஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்படும் அரசாங்க நிதி சரியாகப் போய் சேரவில்லை என கூறியிருப்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.” என்று தெரிவித்துள்ளார்.
மலிவாக விளம்பரம் தேடுவது போல் அவர் நடந்து கொள்வதாகவும் மோகனா குற்றம் சாட்டியுள்ளார்.
தற்போது இந்த விவகாரம் குறித்து மஇகா தேசிய உதவித் தலைவர் டி.மோகன் உட்பட இன்னும் பல தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிபி கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய கேவியஸ், தேசிய முன்னணியில் இந்தியர்களைப் பிரதிநிதித்து செயல்பட தமது கட்சி தயாராக இருப்பதாகவும், தற்போது இந்தியர்களின் சார்பாக பாரிசானில் இருந்து வரும் மற்ற கட்சிகள் இந்தியர்களுக்காக குரல் எழுப்புவதில்லை என்று தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.
அதேவேளையில், இந்திய மக்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் சரியான வழியில் போய் சேர்கிறதா? என்பதை தேசிய முன்னணியில் உள்ள இந்தியத் தலைவர்கள் சரியாக கவனிப்பதில்லை என்றும் கேவியஸ் குற்றம் சாட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.