கொலோன் – 2016-ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் ஜெர்மன் மக்களுக்கும், அந்நாட்டு அரசாங்கத்திற்கும் கசப்பான அனுபவத்தைக் கொடுத்து இருக்கிறது. புத்தாண்டு பிறக்கும் இரவில், கொலோன் நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏறக்குறைய 500 குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் குடியேறிகள் தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஆப்பிரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்த குடியேறிகளுக்கு ஜெர்மன் அரசாங்கம் இடம் அளித்ததால், உள்நாட்டு மக்களுக்கு பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
‘வெட்கப்பட வேண்டிய இரவு’ (Night Of Shame) எனும் பெயரில் ஜெர்மன் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொலோன் நகரின் மத்திய இரயில் நிலையத்தில், புத்தாண்டு இரவில் ஏறக்குறைய ஆயிரம் ஆண்கள், இரயில் நிலையத்தில் இருந்த பெண்களை சூழ்ந்து, அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி உள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து வழிப்பறியும் செய்துள்ளனர்.”
“கொலோன் நகரில் மட்டும் 379 குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 40 சதவீத வழக்குகள் பெண்களுக்கு எதிராக பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் குற்றங்கள் ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளன.
இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று என்னவென்றால், குற்றங்களில் ஈடுபட்ட குழுவினர் அனைவரும் ஆப்பிரிக்க குடியேறிகள் என்று கூறப்படுவது தான்.
இதற்கிடையே, நடுநிலையாளர்கள் இந்த விவகாரம் குறித்து கூறுகையில், “சில சம்பவங்களில் உண்மை இருக்கலாம். ஆனால் பல சம்பவங்கள், குடியேறிகளுக்கு எதிராக புனையப்பட்டது தான்” என்று தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை இந்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்தால் ஜெர்மனியை பிரிக்க வேண்டிய நிலை கூட வரலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.