ஜாகர்த்தா – நேற்று நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து, உடனடியாக அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய ஜாகர்த்தா காவல் துறையினர் இதுவரை மூன்று சந்தேகப் பேர்வழிகளைக் கைது செய்துள்ளனர்.
மத்திய ஜாகர்த்தாவிலிருந்து ஏறத்தாழ ஒன்றரை மணி நேர பயண தூரத்திலுள்ள டெப்போக் என்ற இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நடத்திய தேடுதல் வேட்டையில் இவர்கள் பிடிபட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை நடத்தியது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்போடு தொடர்புள்ளவர்கள்தான் என இந்தோனேசியக் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள ராக்கா என்னும் நகரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்து போராடி வரும் இந்தோனேசியரான பஹ்ருண் நைம் என்பவர் இயக்கி வரும் அமைப்பின் உறுப்பினர்கள்தான் இந்த மூவரும் எனக் கருதப்படுகின்றது.
ஜாகர்த்தா வெடிகுண்டுத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 தீவிரவாதிகளும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர்களில் இருவர் பயங்கரவாத செயலுக்காக ஏற்கனவே தண்டனை பெற்றவர்கள் என்றும் காவல் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் நேற்றைய தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 என உறுதிப்படுத்திய இந்தோனேசிய அதிகாரிகள் அவர்களில் 4 பேர் வெளிநாட்டவர்கள், 6 பேர் காவல் துறையினர் மற்றவர்கள் இந்தோனேசியர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நேற்றைய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், தூதரகங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள், சுற்றுலாத் தளங்கள் அனைத்தின் மீதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.