கோலாலம்பூர் – பீப் பாடல் சர்ச்சையிலிருந்து ஒரு வழியாக மீண்டு வந்து விட்ட அனிருத், இன்று கோலாலம்பூர் வருகை தந்து, எதிர்வரும் பிப்ரவரி 13ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் தனது இரண்டாவது இசை நிகழ்ச்சி தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனிருத்….
இதுவரை 11 படங்களுக்கு இசையமைத்து பல புகழ்பெற்ற பாடல்களை உருவாக்கியவர் அனிருத். ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரியில் கோலாலம்பூரில் சன்வே பீச் ரிசோர்ட்டில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடத்திய இவர், மீண்டும் எதிர்வரும் பிப்ரவரி 13ஆம் தேதி மெர்டேக்கா அரங்கில் தனது இரண்டாவது இசை நிகழ்ச்சியை நடத்துகின்றார்.
ஏறத்தாழ 15,000 பேர் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கான நுழைவுச் சீட்டுகள் தற்போது விற்பனையில் உள்ளன. 133 ரிங்கிட் முதல் 383 ரிங்கிட் வரை நுழைவுச் சீட்டுகளுக்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
கோலாலம்பூரில் அனிருத் – இரட்டைக் கோபுரப் பின்னணியில் எடுத்துக் கொண்ட படம்…
இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அனிருத் கடந்த ஆண்டு நிகழ்ச்சியை விட இந்த ஆண்டு நிகழ்ச்சி மேலும் பிரம்மாண்டமானதாகவும், சிறப்பாகவும் இருக்கும் என அறிவித்துள்ளார்.
தனது தனிப்பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்பையும் (ஆல்பம்) இந்த நிகழ்ச்சியில் வெளியிடப் போவதாக அனிருத் அறிவித்துள்ளார். பிப்ரவரி 13ஆம் தேதி இரவு தொடங்கும் இந்த நிகழ்ச்சி மறுநாள் 14ஆம் தேதி வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் என்பதால் நள்ளிரவைத் தாண்டி நீளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கோலாலம்பூரில் அனிருத் – நண்பர்களுடன்…
மலேசியாவில் நிகழ்ச்சி நடத்துவது தனக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒன்று எனவும், மலேசியாவைத் தனது இரண்டாவது இல்லமாகக் கருதுவதாகவும் அனிருத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மேலும் கூறினார்.
இந்த இசை நிகழ்ச்சிக்கு அனைத்துலக அளவில் சுமார் 3,000 இரசிகர்கள் வருகை தருவார்கள் என்றும் மதிப்பிடப்படுகின்றது. இவர்கள் ஏறத்தாழ 30 மில்லியன் ரிங்கிட் வரை மலேசியாவில் செலவழிப்பார்கள் என்றும் மலேசிய சுற்றுலாப் பயணக் கழகத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இசை நிகழ்ச்சியில் உள்நாட்டுக் கலைஞர்களும் பங்கு பெறுவார்கள்.
அண்மையில், பீப் பாடல் சர்ச்சையில் அனிருத்தின் பெயரும் அடிபட்டது. சிம்புவின் அந்தப் பாடலுக்கு இசையமைத்தது அனிருத்தான் என்றும் கூறப்பட்டது. ஆனால், தமிழகக் காவல் துறையினர் முன் நேரில் வருகை தந்த அனிருத் அந்தப் பாடலுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என விளக்கம் தந்துள்ளார்.
(படங்கள்: நன்றி – அனிருத் டுவிட்டர் பக்கம்)