கோலாலம்பூர் – கோலாகலமாகத் தொடங்கிய தைப்பூசத் திருவிழாவை சோகமயமாக்கிய, தைப்பூச பக்தர்களைப் பலிவாங்கிய கார் விபத்துக்குக் காரணமான கார் ஓட்டுநரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூர் காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவின் தலைவர் துணை ஆணையர் முகமட் நட்ஸ்ரி ஹூசேன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
25 வயது கொண்ட, விற்பனையாளரான அந்தக் கார் ஓட்டுநர் கோலாலம்பூர் ஜாலான் பண்டார் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைச் செய்ததைத் தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இரவு 7.20 மணியளவில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.
அந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் இன்னும் விசாரணை நடத்தி வருவதாகவும், அதனால், பயம் காரணமாக காரை நெடுஞ்சாலையில் கைவிட்டு விட்டு அவர் தலைமறைவானாரா என்பது குறித்து இப்போதைக்குக் கூற முடியாது எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் ஆரூடங்கள் கூறுவதை பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் முகமட் நட்ஸ்ரி அறிவுறுத்தி உள்ளார்.