கோலாலம்பூர் – அரசாங்கப் பதவி வகித்த காலத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதோடு, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று கூறி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் மொகமட்டோடு மேலும் இருவர் சேர்ந்து இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மகாதீரோடு முன்னாள் லங்காவி அம்னோ மகளிர் பிரிவு உறுப்பினர் அனினா சாடுடின் மற்றும் முன்னாள் பத்து கவான் தொகுதி அம்னோ உதவித்தலைவர் கைருடின் அபு ஹசான் ஆகிய இருவரும் மனுதாரர்களாக இணைந்துள்ளனர்.
தங்கள் மனுவில் அவர்கள் நஜிப்பை ஒரே பிரதிவாதியாகக் குறிப்பிட்டுள்ளனர்.
பொது அலுவலகத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டது, பிரதமர் பதவியைப் பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்தது, பாரிசான் மற்றும் அம்னோவின் தலைவராக இருந்து கொண்டு 1எம்டிபி விசாரணையில் இடையூறாக இருப்பது, பரிந்து பேசுவது, தாமதப்படுத்துவது, கவிழ்ப்பது போன்ற மோசடிகளை செய்தது உள்ளிட்ட செயல்களை நஜிப் செய்தார் என்பதை நீதிமன்றம் அதிகாரப்பூர்வமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
அதேவேளையில், நஜிப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனினா மற்றும் கைருடின் ஆகிய இருவரின் பதவிகளைப் பறித்த விவகாரத்திலும் அதே போன்று நீதிமன்றம் பிரகடனப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை செலவிற்கான விளக்கம் மற்றும் 42 மில்லியன் ரிங்கிட்டிற்கான கணக்கு உள்ளிட்ட விவகாரங்களிலும் அவர்கள் விளக்கம் கேட்டுள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.