செம்பூர்ணா – நேற்று வெள்ளிக்கிழமை இரவு சபா மாநிலத்தில் செம்பூர்ணா புலாவ் லிகிடான் அருகே ஆயுதமேந்திய பிலிப்பைன்ஸ் கும்பல் ஒன்று, மலேசியப் படகு ஒன்றைச் சேர்ந்த 4 பணியாளர்களைக் கடத்திச் சென்றுள்ளது.
மலேசியப் பதிவு படகான ( MV MASFIVE 6) நேற்று இரவு புலாவ் லிகிடான் அருகே சென்று கொண்டிருந்த போது, மற்றொரு விசைப்படகில் வந்த 8 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல், துப்பாக்கி முனையில் 4 மலேசியர்களைக் கடத்திச் சென்றுள்ளது.
அதே படகில் இருந்த 3 மியன்மார் மற்றும் இரண்டு இந்தோனிசிய நாட்டினரை எதுவும் செய்யாமல் விட்டுச் சென்றுள்ளனர்.
முதற்கட்டத் தகவலின் படி, கடத்தப்பட்டவர்கள் வோங் டெக் பாங் (வயது 31), வோங் ஹங் சோங் (வயது 34), வோங் டெக் சி (வயது 29), ஜானி லாவ் ஜங் ஹெய்ன் (வயது 21) என்ற விபரம் தெரியவந்துள்ளது. அவர்கள் நால்வரும் சரவாக் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை மலேசிய எல்லையில் 10 பணியாளர்களுடன் தாய்வான் விசைப்படகைக் கடத்திய அபு சயாப் கும்பலுக்கும், நேற்று நடந்த கடத்தல் சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா? என்பதை காவல்துறை தற்போது விசாரணை செய்து வருகின்றது.