பாரிஸ்: நேற்று ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இரகசியமாகக் கசியவிடப்பட்ட சுமார் 11.5 மில்லியன் ஆவணங்கள் மூலம் அதிர்ச்சி தரும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய பணப் பரிமாற்றங்கள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின், காற்பந்து விளையாட்டாளர் லியோனல் மெஸ்ஸி, ஹாங்காங் திரைப்பட நட்சத்திரம் ஜேக்கி சான், ஆகியோருடன் மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகன் முகமட் நசிபுடின் (படம்) பெயரும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1எம்டிபி விவகாரத்தில் நாட்டில் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்து வரும் நஜிப்புக்கு இது மற்றொரு தலைவலியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஜெர்மன் நாளிதழ் ஒன்றினால் பெறப்பட்ட இந்த இரகசிய ஆவணங்கள், அனைத்துலக புலனாய்வு ஊடகவியலாளர்கள் (International Consortium of Investigative Journalists) கூட்டமைப்பினால் உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
தென் அமெரிக்க நாடான பனாமாவில் உள்ள மொசாக் ஃபொன்செகா என்ற வழக்கறிஞர் நிறுவனத்திலிருந்து இந்த ஆவணங்கள் வெளியாகியுள்ளன. உலகின் மற்ற நாடுகளில் சுமார் 35 கிளைகளை இந்த வழக்கறிஞர் நிறுவனம் கொண்டிருக்கின்றது.
இந்த ஆவணங்கள் சட்டபூர்வமானவை என்றாலும், இதில் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களின் பெயர்களால் அவர்களின் சொந்த நாடுகளில் அவர்களுக்கு கடுமையான அரசியல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 40 ஆண்டுகளாக நடைபெற்ற பணப் பரிமாற்றங்கள் பனாமா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ளன.
பிரதமர் நஜிப்பின் முதல் மனைவியின் மூலம் பிறந்த அவரது இரண்டாவது மகனான முகமட் நசிபுடின் பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகளில் அமைக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் ஈடுபட்டிருந்தார் என்பது பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கும் தகவலாகும்.
கசிந்துள்ள ஆவணங்களின் அளவை வைத்துப் பார்க்கும்போது இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கான மிகப் பெரிய கசிவு இது என ஊடகங்கள் வர்ணித்துள்ளன.