கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய இஸ்லாம் சமய போதகர் டாக்டர் ஜாகிர் நாயக் உரையாற்றுவதற்கு, மஇகா ஒப்புக்கொண்டதால் தான் துணைப்பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி இந்த விவகாரத்தில் சமரசம் பேசினாரா? என்று மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மலாக்கா யுடிஇஎம் (Universiti Teknikal Malaysia) -ல் பேச ஜாகிருக்கு அரசாங்கம் பச்சை விளக்கு காட்டிவிட்டதாக துணைப்பிரதமர் கூறியிருக்கின்றார்.”
“ஆளுங்கட்சிக் கூட்டணியான மஇகா, அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருக்கின்றது. அப்படி இருக்கையில், அக்கட்சியே இந்து சங்கம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளுடன் இணைந்து ஜாகிரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வேளையில், அரசாங்கம் எதை வைத்து அம்முடிவை (சமரசம்) எடுத்தது?” என்று மோகன் ஷான் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 17-ம் தேதி, மலாக்காவில் ‘இந்து சமயம் மற்றும் இஸ்லாம் இடையிலான ஒற்றுமைகள்’ என்ற தலைப்பில் ஜாகிர் பேசுவதாக இருந்த உரை இரத்து செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று துணைப்பிரதமர் சாஹிட் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், வேறு தலைப்பில் பேசுவதாக ஜாகிர் நாயக் ஒப்புக் கொண்டதால், அவருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.