கோலாலம்பூர் – பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் கே.பத்மநாபன் என்ற முகமட் ரித்துவானுக்கு கைது ஆணை பிறப்பிக்குமாறு காவல்துறைக்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்றத்தை உத்தரவை மதித்து அதை செயல்படுத்தத் தயாராகிறார் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர்.
அதற்கு முன்னதாக சமநிலையில் இருக்கும் சிவில் உயர்நீதிமன்றம் மற்றும் ஷரியா உயர் நீதிமன்றத்தின் சர்ச்சைக்குரிய உத்தரவுகளை நடுநிலையின் அடிப்படையில் காவல்துறை எடுத்துக் கொள்கிறது என்றும் காலிட் தெரிவித்துள்ளார்.
“என்றாலும், இந்த நாட்டின் நீதித்துறையில், கூட்டரசு நீதிமன்றம் தான் உயர்ந்தது. அதன்படி காவல்துறை அதன் உத்தரவைப் பின்பற்றும். நாங்கள் அவருக்கு கைது ஆணை பிறப்பிப்போம்” என்று கூச்சிங்கில் இன்று செய்தியாளர்களிடம் காலிட் தெரிவித்துள்ளார்.
தாயின் அனுமதியின்றி குழந்தைகளை இஸ்லாமிற்கு மதமாற்றம் செய்த வழக்கில், கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று இந்திராகாந்தியின் மகள் பிரசன்னா டிக்சாவை ஆஜர் படுத்தத்தவறிய முகமது ரித்துவானை கைது செய்யும் படி காவல்துறைக்கு கூட்டரசு நீதிமன்ற நீதிபதி முகமட் ராவுஸ் ஷரீப் உத்தரவிட்டார்.
இவ்வழக்கில் இதற்கு முன்னர் ஈப்போ உயர்நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பை நிலைநிறுத்திய ராவுஸ், இக்கைது உத்தரவைக் கண்காணிக்கும்படியும் ஈப்போ உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.