Home நாடு லோ சியூ ஹோங்கின் 3 குழந்தைகளும் முஸ்லீம்கள் அல்ல! – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

லோ சியூ ஹோங்கின் 3 குழந்தைகளும் முஸ்லீம்கள் அல்ல! – கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு

214
0
SHARE
Ad
Loh Siew Hong

புத்ரா ஜெயா : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வழக்கு தனித்து வாழும் தாயார் லோ சியூ ஹோங்கின் 3 குழந்தைகள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட வழக்காகும்.

அந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று செவ்வாய்க்கிழமை (மே 14) நாட்டின் உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

3 பேர் கொண்ட அமர்வு இன்றையத் தீர்ப்பை வழங்கியது. தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான அந்த அமர்வு பெர்லிஸ் இஸ்லாமிய மலாய் பாரம்பரிய மன்றம் தொடுத்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தது. பி.நளினி மற்றும் அபு பாக்கார் ஜாய்ஸ் ஆகிய இருவரும் மற்ற இரு நீதிபதிகளாவர்.

#TamilSchoolmychoice

தனது 15 வயது இரட்டையர்களான மகள்களையும் 12 வயது மகனையும், இஸ்லாத்திற்கு மாற்றிய தன் கணவர் முகமட் நாகேஸ்வரன் முனியாண்டி எடுத்த நடவடிக்கை சட்டரீதியாக செல்லாது என லோ சியூ ஹோங் தொடுத்திருந்த வழக்கை ஏற்றுக் கொண்டு கடந்த ஜனவரி 10-ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களின் மதமாற்றம் செல்லாது எனத் தீர்ப்பை வழங்கியது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக பெர்லிஸ் மாநில அரசாங்கம், மாநில முஃப்டி முகமட் அஸ்ரி, சைனுல் அபிடின், மாநில இஸ்லாமிய மதம் மாறியோர் பட்டியல் இலாகா ஆகியவை மேல்முறையீடு செய்திருந்தன.

அந்த மேல்முறையீட்டைத்தான் கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ஒருதலைப்பட்சமான மதமாற்ற முடிவை எதிர்த்து 36 வயதான லோ வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பு வழங்கியது.

2018-இல் இந்திரா காந்தி வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 18 வயதுக்கும் குறைவான வயதுடையவர்கள் மதம் மாற்றம் செய்யப்படுவதற்கு பெற்றோர்கள் இருவரின் ஒப்புதலும் தேவை எனத் தெரிவித்தது.

அந்தத் தீர்ப்பை மாற்றுவதற்கான அவசியம் எழவில்லை என தீர்ப்பை வாசித்த தெங்கு மைமுன் குறிப்பிட்டார்.

லோ சியூ ஹோங்குக்கும் அவரின் கணவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் லோ கணவரால் தாக்கப்பட்டார். அந்தத் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்காக அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரின் 3 குழந்தைகளையும் ஒருதலைப்பட்சமாக லோவின் கணவர் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார்.

பிப்ரவரி 2022-இல் லோவின் 3 குழந்தைகளையும் தாயாருடன் இணைந்து வாழ கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதுவரையில் அந்தக் குழந்தைகள் சமூக நல இலாகாவின் பாதுகாப்பில் இருந்து வந்தனர். லோ குடும்பத்துடன் தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கில் வசித்து வருகிறார்.