Home நாடு “ஆசிரியர்களின் தன்னலமில்லா சேவையைப் பாராட்டுவோம்” – சரவணன் ஆசிரியர் தின வாழ்த்து

“ஆசிரியர்களின் தன்னலமில்லா சேவையைப் பாராட்டுவோம்” – சரவணன் ஆசிரியர் தின வாழ்த்து

295
0
SHARE
Ad

டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் அவர்களின்
ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

ஆசிரியர் பணி என்பது அறப்பணி. பாடபுத்தகத்தில் இருக்கும் கல்வி மற்றும் அல்லாமல் நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, ஆற்றல் போன்றவற்றை அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆற்றல் மிகுந்த ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது” – குறள் 103

எந்தப் பிரதி பலனும் கருதாமல் செய்த உதவியின் நன்மை, கடலை விடவும் பெரியது. அப்படி எந்தப் பிரதிபலனும் இல்லாமல், தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்களை உயர்த்தும் ஒரே நோக்கில் பாடுபடுபவர்கள்தான் ஆசிரியர்கள்.

#TamilSchoolmychoice

அனைத்து மாணவர்களையும் சமமாக நோக்கி, செம்மைப்படுத்தி, சிந்திக்க வைத்து, கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக உருவாக்கி விடுவதற்கு ஒவ்வொரு ஆசிரியர்களும், அவர்களின் ஈடு இணையற்ற சேவையை வழங்கிய வண்ணம் இருக்கிறார்கள்.

“தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு”

கற்க கற்க அறிவு பெருகும். கற்றுக்கொடுப்பவர்கள் மட்டும் ஆசிரியர்கள் அல்ல, தொடர்ச்சியாகக் கற்பவர்கள்தான் சிறந்த நல்லாசிரியர்களாக வலம் வர முடியும். ஆசிரியர் என்பது தொழில் அல்ல. அது ஒரு கடமை, சேவை எனும் அடிப்படை மனநிலை இருந்தால் மட்டுமே சிறந்த மாணவர்களை உருவாக்க முடியும்.

தொழில் புரட்சி 4.0 நோக்கிப் பயணிக்கும் இக்கால கட்டத்தில் நாம் மாணவர்கள் பல்வேறு துறைகளிலும் மிளிர வைக்க வேண்டும். அவர்கள் பல்திறன் கொண்ட மனித ஆளுமைகளாக உருவாக ஆசிரியர்கள் அடித்தளம் அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த சமுதாயம் ஆசிரியர்களை நம்பித்தான் இருக்கிறது. திறன்மிக்கத் தலைமுறையை உருவாக்கும் கடமையும், பொறுப்பும் ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. கல்வி ஒன்றே நமக்கான சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும்.

எனவேதான், காலமான துன் சாமிவேலு அவர்கள் வீட்டுக்கொரு பட்டதாரியை உருவாக்க வேண்டும் எனும் கொள்கையைக் கையில் எடுத்தார். நமது சமுதாயம் முன்னேற கல்விதான் சரியான வழி என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் மத்தியில் கல்வி மட்டும் அல்லாமல் சமயம், மொழிப்பற்று, நுண்ணறிவு, புத்தாக்க திறன் அடிப்படையிலும் அவர்கள் மேன்மையடையச் செய்வதை ஆசிரியர்கள் கொள்கையாகக் கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் மனித ஆற்றல் என்பது பல திறன்களைக் கொண்டிருப்பது அவசியமாகிறது.

ஆசிரியர்களை இன்றைய கால மாற்றத்திற்கு ஏற்ப தயார்படுத்துவதும் தலையாய கடமையாகிறது. 3 வருடங்களுக்கு முன்பு இயங்கலையில் கல்வி என்பதை யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் இன்று அது தேவை என்று ஆகிவிட்டது. அது போல பற்பல மாற்றங்களை எதிர்கொள்ளும் ஆற்றலை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது தன்னம்பிக்கை வார்த்தைகளும், தூண்டுகோளும், அங்கீகாரமும் தேவைப்படுகிறது. அவர்களின் தன்னலமில்லா சேவையைப் பாராட்ட வேண்டும். அவர்களை உற்சாகப்படுத்தி மேலும் மேலும்
தரமான மாணவர்களை உருவாக்க வித்திட வேண்டும்.

“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”. அந்தக் கல்வியை நமக்குக் கற்றுத் தந்த ஆசானுக்கு வாழ்நாள் முழுதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

ஆக இந்த ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களையும் மனதாரப் பாராட்டி, வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.