Home நாடு உலுதிராம் காவல் நிலையம் மீது தாக்குதல் – 2 காவல்துறையினர் மரணம் – ஒருவர் மருத்துவமனையில்!

உலுதிராம் காவல் நிலையம் மீது தாக்குதல் – 2 காவல்துறையினர் மரணம் – ஒருவர் மருத்துவமனையில்!

359
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தின் உலுதிராம் வட்டாரத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தின் மீது நபர் ஒருவர் தீடீரென நடத்திய தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு அதிகாரி காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த காவல் துறையினர் கான்ஸ்டபிள் அகமட் அஸ்ஸா என்றும் கான்ஸ்டபிள் முகமட் ஷாபிக் அகமட் சைட் என்றும் காவல் துறை அறிவித்திருக்கிறது.

தாக்குதல் நடத்திய நபர் மீது காவல் துறையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் அவர் சம்பவம் நடந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். அவர் ஜெமாஆ இஸ்லாமியா என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர் என காவல் துறை தலைவர் ஐஜிபி ரசாருடின் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உலுதிராம் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்திய நபரின் குடும்பத்தினர் ஐவரும் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்தியவரின் 62-வயது தந்தையாரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராவார். அவரும் ஜெமாஆ இஸ்லாமியா என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைவசம் வைத்திருந்த பொருட்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, அவர் தாக்குதல் நடத்தும் நோக்கத்திலேயே உலுதிராம் காவல் நிலையம் வந்திருந்தார் என்றும் ரசாருடின் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் 19 முதல் 62 வயது வரையிலானவர்கள் ஆவர்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் இல்லத்தில் நடத்திய சோதனையின்போது அங்கு சுவர்களில் சில வாசகங்கள் ஒட்டப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் ஐஜிபி கூறினார்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சில மாணவர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தாக்குதல் நடத்திய சந்தேக நபர் காவல் நிலையத்தில் இருந்து ஆயுதங்களைத் திருடும் நோக்கத்தைக் கொண்டிருந்தார் எனத் தாங்கள் கருதுவதாகவும் ஐஜிபி குறிப்பிட்டார்.

ஜோகூரில் உள்ள ஜெமாஆ இஸ்லாமியா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதான புலனாய்வு விசாரணைகளைத் தாங்கள் முடுக்கி விட்டதாகவும் ஐஜிபி ரசாருடின் கூறினார். ஜோகூரில் சுமார் 20 உறுப்பினர்கள் அந்த இயக்கத்தில் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.