சென்னை – நடிகர் சங்க கட்டடத்தில் கமல் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவதாகச் சொல்லியிருந்தார். அதன்படி நேற்றுக் காலை பிரபலங்கள் மத்தியில் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முதலில், நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் முதல் விழா என்பதால் அதற்கான காசோலையை கமல் வழங்க, பொருளாளர் கார்த்தி பெற்றுக் கொண்டார். கமலுடன், இளையராஜா, ஸ்ருதி, விஷால், நாசர், மன்சூர் அலிகான், பாண்டியராஜன், பிரபு. கார்த்தி, ரம்யா கிருஷ்ணன், தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் படத்தலைப்பை இளையராஜா வெளியிட்டார். தமிழில் இளையராஜா வைத்த ’சபாஷ் நாயுடு’ பெயரைத்தான் கமல் தேர்ந்தெடுத்தார். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் படம் தயாராகிவருகிறது. ஏற்கனவே பாதிபடம் அமெரிக்காவில் படமாக்கப்பட்டு விட்டது.
தமிழ், தெலுங்கில் கமலுடன் துணை கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் நடித்திருக்கிறார். ஜோடியாக ரம்யாகிருஷ்ணனும், மகளாக ஸ்ருதி ஹாசனும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமலின் கதை, திரைக்கதையில், இளையராஜாவின் இசையில் உருவாகும் இந்தப் படத்தை, டி.கே.ராஜிவ்குமார் இயக்குகிறார்.
டி.கே. ராஜிவ்குமார் இந்தியாவின் முதல் 3டி படமான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். கேரள திரையுலகில் பேர் பெற்ற ஓர் இயக்குநர். 1989-இல் கமல், ஊர்மிளா நடிப்பில் இவர் இயக்கிய ‘சாணக்கியன்’ என்ற மலையாளப்படம் வெளியாகி பெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.