ரியோ டி ஜெனிரோ – அனைத்துலக ஒலிம்பிக் மன்ற நிர்வாகத்தில் முதன் முறையாக இந்தியப் பெண்மணி ஒருவர் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வேறு யாருமல்ல!
இந்தியாவில் முதல் நிலை பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவியான நீத்தா அம்பானிதான் அவர். இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தீவிரம் காட்டி வந்த அவர், ஐபிஎல் அணிகளில் ஒன்றான மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்தார்.
ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கவிருக்கும் நிலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற 129வது அனைத்துலக ஒலிம்பிக் மன்ற பொதுக் கூட்டத்தில் அவர் ஒலிம்பிக் மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதன் மூலம் அனைத்துலக ஒலிம்பிக் மன்ற நிர்வாகக் குழுவுக்குத் தேர்வு பெறும் முதல் இந்தியப் பெண்மணியாக அவர் திகழ்கின்றார். தனிநபர் செயற்குழு உறுப்பினராக பதவி வகிக்கும் இந்தியர்களின் வரிசையில் அவர் மூன்றாவது நபராவார்.
அனைத்துலக ஒலிம்பிக் மன்ற நிர்வாகக் குழுவில் இடம்பெற்ற முதல் இந்தியர் சர் டொராப்ஜி டாட்டா ஆவார். அடுத்ததாக ராஜா ரண்டீர் சிங் தற்போது கௌரவ நிர்வாக உறுப்பினராக அனைத்துல ஒலிம்பிக் மன்றத்தில் நீடிக்கின்றார். இவர் 2000 முதல் 2014 வரை அனைத்துலக ஒலிம்பிக் மன்ற நிர்வாகக் குழுவில் பணியாற்றினார்.
இந்தப் பதவிக்கு நீத்தா அம்பானி கடந்த ஜூன் மாதத்தில் முன்மொழியப்பட்டார். நீத்தா தனது 70வது வயது வரையில் இந்தப் பதவியில் நீடிக்க முடியும்.