கோலாலம்பூர் – மஇகாவின் முன்னாள் வியூக இயக்குநர் கே.இராமலிங்கம் மற்றும் எழுவர் கொண்ட குழுவினர் சங்கப் பதிவகத்தின் முடிவுகளுக்கு எதிராக செய்திருந்த சீராய்வு மனுவுக்கான விசாரணையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் எதிர்வரும் அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறுவதற்கு நிர்ணயித்துள்ளது.
சங்கப் பதிவகத்தின் முடிவுகளுக்கு எதிராக அந்த எண்மர் செய்திருந்த விண்ணப்பம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளை இன்று செவிமெடுத்த பின்னர் உயர் நீதிமன்றத்தின் துணை பதிவாளர் நோராசிலின் ஒத்மான் அந்த தேதியை நிர்ணயித்தார்.
உயர்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ஹானிபா ஃபாரிகுல்லா முன்னிலையில் இந்த விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீராய்வு மனுவை அந்த எண்மரும் மார்ச் 2016-இல் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தனர். 2013-மஇகா தேர்தல்களை செல்லாது எனக் கூறி சங்கப் பதிவகம் செய்திருந்த முடிவுகள், மற்றும் மறு-தேர்தல் நடத்துவதற்கான உத்தரவு ஆகியவை ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அந்த எண்மரும் தங்களின் மனுவில் கோரியிருந்தனர்.
சங்கப் பதிவகம், அதன் தலைமை இயக்குநர் முகமட் ராசின் அப்துல்லா, சங்கப் பதிவக அதிகாரி அக்மால் யாஹ்யா ஆகியோர் இந்த வழக்கில் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இராமலிங்கம் தவிர்த்து, வி.கணேஷ், டத்தோ ஹென்ரி பெனடிக்ட் ஆசீர்வாதம், எம்.சத்தியமூர்த்தி, ஜோர்ஜ் அலெக்சாண்டர் பெர்னாண்டஸ், ஆர்.எம்.பிரபு, ஆர்.சிதம்பரம் பிள்ளை, டத்தோ எம்.வி.ராஜூ ஆகிய எழுவர் வாதிகளாக இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.