கோலாலம்பூர் – பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக்கில் நேற்று புதன்கிழமை “கெய்ரின்” (keirin) எனப்படும் சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அசிசுல் ஹாஸ்னி அவாங், நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில், திரெங்கானு மாநில அரசாங்கம் குறித்து கூறியிருந்த புகாரை திரெங்கானு விளையாட்டு மன்றம் மறுத்துள்ளது.
ரியோ ஒலிம்பிக்கிற்குத் தயாராவதற்காகத் தானும், மற்றொரு சைக்கிள் ஓட்டியான ஃபாதேஹா முஸ்தபாவும், கோரியிருந்த உதவிகளைச் செய்யாமல் மாநில அரசு அலட்சியம் செய்ததாக அசிசுல் நேற்று வெண்கலப் பதக்கம் பெற்ற பிறகு பேஸ்புக்கில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், அது குறித்து திரெங்கானு விளையாட்டு மன்றத்தின் இயக்குநர் இப்னி அமின் புசூவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, தங்களுக்கு அப்படி எதுவும் கோரிக்கை வரவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திரெங்கானு மந்திரி பெசார் அகமட் ராசிப் அப்துல் ரஹ்மான் இது குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டு மன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.