சிங்கப்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுதந்திர தின உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் உடல் நலக் குறைவால் திடீரென தனது உரையைப் பாதியிலேயே நிறுத்தி, சிங்கப்பூர் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய சிங்கை பிரதமர் லீ சியன் லூங் தனது உடல் நலத்தை உறுதிப் படுத்தும் வண்ணம் மீண்டும் மேடையேறி தனது சுதந்திர தின உரையைத் தொடர்ந்தார்.
தலைமைத்துவ தொடர்ச்சி மிக முக்கியம் என்ற கருத்தை தனது உரையைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே வலியுறுத்தினார் லீ.
உடல் நலக் குறைவால் மேடையிலிருந்து வெளியேறிய சுமார் ஒன்றரை மணி நேரத்திற்குப் பின்னர் பலத்த கைத்தட்டல்களுக்கிடையில் மீண்டும் மேடையேறினார் லீ. ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணியளவில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கியபோது, லீயின் உரையும் தொடர்ந்தது.
ஆங்கிலத்தில் உரையாற்றியபோது தனது உரையைப் பாதியில் நிறுத்திய லீ, “சற்று முன் நடந்த சம்பவம் தலைமைத்துவ தொடர்ச்சி தொடர்வதற்கான முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. நாம் அமைச்சர்களோ இல்லையோ, நாம் அனைவரும் நிரந்தரமானவர்கள் அல்ல. அண்மையில் நிதியமைச்சர் ஹெங் சுவீ கியாட்டுக்கு நேர்ந்த உடல் நலக் குறைவு எங்களுக்கெல்லாம் அச்சத்தை ஏற்படுத்தியது. சற்றுமுன் நான் உங்களுக்குத் தந்த அதிர்ச்சியைவிட மோசமான அதிர்ச்சியை ஹெங் சுவீ கியாட்டின் நிலைமை ஏற்படுத்தியது. இருப்பினும், அடுத்த தலைமுறைத் தலைவர்களுக்கான சிறந்த குழுவொன்று தற்போது சிங்கை அமைச்சரவையில் செயல்பட்டு வருகின்றது” என்றும் லீ தனது உரையில் சுட்டிக் காட்டினார்.
மூன்று மாதங்களுக்கு முன்னால் நிதியமைச்சர் ஹெங் இதயத் தாக்குதல் (ஹார்ட் அட்டாக்) ஏற்பட்டு, அமைச்சரவைக் கூட்டத்தின் போது சரிந்து விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
(படம்: சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் லீ – நன்றி: சிங்கை பிரதமர் அலுவலகம்)