சிங்கப்பூர் – சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றிலிருந்து தான் 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஜிக்கா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குவோகோ லேண்ட் என்ற மேம்பாட்டு நிறுவனம் கட்டி வரும் அக்கட்டிடத்தில், சுமார் 118 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஜிக்கா வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை செம்பாவாங் பகுதியில் வசிக்கும் சிங்கப்பூரர் ஒருவருக்கு காய்ச்சலும், உடலில் தடிப்புகளும் ஏற்பட்டதையடுத்து, ஜிக்கா வைரசின் பாதிப்பு கண்டறியப்பட்டது.
அதேவேளையில், 36 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் ஜிக்கா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூர் தேசிய சுகாதார அமைப்பு, கடந்த வாரம் புதன்கிழமை, அந்தக் கட்டுமானத் தளத்திற்குச் சென்று பரிசோதனைகளை மேற்கொகொண்டது.
அதனையடுத்து, அக்கட்டுமானத் தளத்தில் இருந்து தான் ஜிக்கா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி, அக்கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறும், அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், தேசிய சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.