கோலாலம்பூர் – மலேசியாவின் 2-வது பெரிய கோடீஸ்வரர் நிலையை பல ஆண்டுகளாகத் தற்காத்து வரும் ஆனந்தகிருஷ்ணன் வட்டாரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பாக, செவிவழி கேள்விப்பட்ட அதிகாரபூர்வமற்ற ஒரு செய்தி!
ஆனந்தகிருஷ்ணன், ரால்ப் மார்ஷல் இருவருமே பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். இளம் வயது முதலே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள்.
அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் வணிகத் துறையில் பட்டம் பெற்று, அமெரிக்காவிலும் மற்ற உலக நாடுகளிலும் ஆனந்தகிருஷ்ணன் வணிகத்தில் முன்னேறி வந்த காலகட்டம் அது. ஒருமுறை கோலாலம்பூர் வந்தவர் தனக்குத் தெரிந்தவர்களிடம், “ரால்ப் மார்ஷல் என்ன செய்து கொண்டிருக்கின்றார்” எனக் கேட்டிருக்கின்றார். அப்போதுதான் படித்து முடித்துவிட்டு அவர் வேலை தேடிக் கொண்டிருப்பதாக, நண்பர்கள் கூறியிருக்கின்றார்கள்.
“மார்ஷலை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” எனக் கூறியிருக்கின்றார் ஆனந்தகிருஷ்ணன். அவ்வாறே, அவரைச் சென்று பார்த்த ரால்ப் மார்ஷல் அதன்பின்னர், ஆனந்த கிருஷ்ணன் நிறுவனத்தில் இணைந்தார் என்று ஒருமுறை ரால்ப் மார்ஷலுக்கு நெருக்கமான ஒருவர் ஒரு சந்திப்பின்போது கூறியிருந்தார்.
கால ஓட்டத்தில், ஆனந்த கிருஷ்ணனின் வணிக சாம்ராஜ்யம் உலகம் முழுவதும் விரிந்து கொண்டே வளர, அவரின் நம்பிக்கையாள தளபதிகளில் ஒருவராக மார்ஷலும் உயர்ந்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் வரை ஆனந்த கிருஷ்ணனின் நிறுவனங்களில் இரண்டாவது நிலையில் அதிகாரத்தில் இருந்தவர் மார்ஷல்.
பிரிவுக்குக் காரணம் என்ன?
ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை! இந்தியாவில் மேக்சிஸ்-அஸ்ட்ரோ செய்த முதலீடுகளால், மாறன் சகோதரர்களினால் – உருவான வழக்கு விவகாரங்களால், இந்திய சிறப்பு நீதிமன்றம் ஆனந்த கிருஷ்ணன், ரால்ப் மார்ஷல் இருவருக்கும் எதிராக கைது ஆணை பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் எழுந்த கசப்புணர்வுகள், கருத்து பேதங்கள் காரணமாக, கடந்த மாதம் செப்டம்பர் மாதத்தோடு, ரால்ப் மார்ஷல் ஆனந்த கிருஷ்ணனின் அனைத்து நிறுவனங்களில் இருந்தும் முற்றாக விலகி விட்டார் என வணிகப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
இருவரின் பிரிவுக்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது, இந்தியாவில் ஆனந்த கிருஷ்ணன் நிறுவனங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விசாரணைகளும், வழக்குகளும்தான் என்றும் ஊடகங்கள் ஆரூடங்கள் வெளியிட்டுள்ளன.
அண்மையில் சுவிட்சர்லாந்து நாட்டின் புலனாய்வு அமைப்புகள் 1எம்டிபி விவகாரம் குறித்து வெளியிட்ட விசாரணை அறிக்கைகளில்கூட, ஆனந்தகிருஷ்ணனின் தஞ்சோங் பிஎல்சி நிறுவனம் குறித்த சில முரண்பாடான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதிலும் ரால்ப் மார்ஷல் பெயர் இழுக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆனந்த கிருஷ்ணன்-ரால்ப் மார்ஷல் இடையில் இருந்து வந்த நட்பும்-வணிக உறவுகளும், இந்தியாவில் மேக்சிஸ் செய்த முதலீடுகளாலும், அதைத் தொடர்ந்து எழுந்த வழக்கு விவகாரங்களாலும், ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும் பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.
-இரா.முத்தரசன்