சென்னை – கடந்த செப்டம்பர் 22-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது ரத்த அழுத்தம், சர்க்கரை, நீர்சத்து குறைபாடு என்று கூறிய அப்போலோ இன்னும், இரண்டு, மூன்று நாட்களில் வீடு திரும்பிவிடுவார் என்றது.
அதன் பின்னர், அவரது நுரையீரலில் தொற்று இருப்பதாகவும் அதை அகற்றும் சிகிச்சைகள் நடந்து வருவதாகவும் அறிவித்தது.
அதனையடுத்து, ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் இருப்பதாகவும், லண்டனில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணர் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.
ஆகக் கடைசியாக, ஜெயலலிதா இன்னும் பல நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற வேண்டும் என்று அறிவித்தது.
இந்நிலையில் இன்று செப்டம்பர் 8-ம் தேதி, அப்போலோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து, பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்படுகின்றன. சுவாச உதவி சிகிச்சையும் தொடர்ந்து தரப்படுகிறது. முதல்வரின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது” என்று கூறப்பட்டுள்ளது.
எனினும், இதுவரை தமிழக ஆளுநர் வித்யாசாகர், சீமான், வைகோ, ராகுல்காந்தி வரை பல முக்கியத் தலைவர்கள் ஜெயலலிதாவைச் சந்திக்க அப்போலோவுக்கு வருகை புரிந்தாலும் கூட இதுவரை யாரும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்தாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.