Home Featured நாடு புதிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்! கிளந்தான் சுல்தானுக்கு வாய்ப்பா?

புதிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்! கிளந்தான் சுல்தானுக்கு வாய்ப்பா?

1133
0
SHARE
Ad

tuanku-halim-agong

கோலாலம்பூர் – கெடா சுல்தான் துவாங்கு அப்துல் ஹாலிம் (படம்) ஐந்து ஆண்டுகள் மாமன்னராக இருந்த பின்னர் பதவி விலகிச் செல்வதை முன்னிட்டு, மலேசியாவின் அடுத்த மாமன்னரை, இன்று புதன்கிழமை தொடங்கும் ஆட்சியாளர்கள் மன்றம் தேர்ந்தெடுக்கவிருக்கின்றது.

மூன்று நாட்கள் நடைபெறும் ஆட்சியாளர்கள் மன்றம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவுறும்போது, புதிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவார். தேர்ந்தெடுக்கப்படுபவர் மலேசியாவின் 15-வது மாமன்னராகத் திகழ்வார்.

#TamilSchoolmychoice

மலேசியாவில் இருக்கும் 9 மாநில சுல்தான்கள் ஒருவர் மாற்றி ஒருவர் மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்படும் புதுமையான மன்னராட்சி முறை மலேசியாவில் பின்பற்றப்படுகின்றது. உலகிலேயே, மலேசியாவில் மட்டும்தான் இந்த முறை பின்பற்றப்படுகின்றது.

இரண்டு முறை மாமன்னராகப் பதவி வகித்த கெடா சுல்தான்

சுதந்திரம் பெற்றது முதல், எல்லா மாநில சுல்தான்களும் ஒருமுறை மாமன்னராக பதவி வகித்திருக்க நடப்பு கெடா சுல்தானுக்கு மட்டும் இரண்டு முறை மாமன்னராக இருக்கும் அபூர்வ வாய்ப்பு அமைந்தது.

1970 முதல் 1975 வரை, மாமன்னராக இருந்தவர் கெடா சுல்தானாகிய  துவாங்கு ஹாலிம். அதன்பின்னர் மற்ற மாநில சுல்தான்கள் தங்களின் மாமன்னர் பதவியை வகித்து முடித்த பின்னர், வரிசைப்படி மீண்டும் கெடா சுல்தானுக்கு 2012-இல் வாய்ப்பு கிடைத்தது. தனது 83-வது வயதில் மீண்டும் மாமன்னராகப் பதவியேற்ற கெடா சுல்தான், மலேசிய வரலாற்றிலேயே அதிக வயதுடைய மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இருப்பினும் 5 ஆண்டுகள் நல்ல உடல் நலத்துடன் மாமன்னர் பணிகளை ஆற்றி, தற்போது 88-வது வயதில் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு மீண்டும் கெடா சுல்தானாக திரும்புகின்றார்.

கிளந்தான் சுல்தானுக்கு வாய்ப்பா?

sultan-muhammad-v-kelantan

வரிசைப்படி இந்த முறை கிளந்தான் சுல்தானுக்கு மாமன்னராகும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 47 வயதான கிளந்தானின் சுல்தான் முகமட் (படம்) 2010-இல் கிளந்தானின் அரியணையில் அமர்ந்தவர். அவரது தந்தை சுல்தான் இஸ்மாயில் பெத்ரா உடல் நலம் குன்றியதை அடுத்து சுல்தான் முகமட் கிளந்தான் சுல்தானாக அறிவிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் அவரது தந்தையார் சுல்தான் இஸ்மாயில் பெத்ரா 1975 முதல் 1979 வரை மாமன்னராக இருந்திருக்கின்றார்.

ஆட்சியாளர்கள் மன்றக் கூட்டத்தில் சபா, சரவாக், மலாக்கா, பினாங்கு மாநில ஆளுநர்கள் கலந்து கொண்டாலும், மாமன்னரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அவர்கள் பங்கு பெற மாட்டார்கள். 9 சுல்தான்கள் மட்டுமே பங்கு பெறுவார்கள்.

பொதுவாக, அனைத்து சுல்தான்களும், கலந்து பேசி, ஒருமனதாக மாமன்னரைத் தேர்வு செய்வார்கள். அல்லது இரகசிய வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மை வாக்குகள் பெறும் சுல்தான் மாமன்னராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அக்டோபர் 14-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாமன்னர் அறிவிக்கப்படுவார். அவர் அரியணை அமரும் விழா பின்னொரு நாளில் நடத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு அவர் மாமன்னராக பதவி வகிப்பார்.

– இரா.முத்தரசன்