Home Featured நாடு “இருமொழித் திட்டம் தாய்மொழிப் பள்ளிகளை அழித்துவிடும்” இராமசாமி எச்சரிக்கை!

“இருமொழித் திட்டம் தாய்மொழிப் பள்ளிகளை அழித்துவிடும்” இராமசாமி எச்சரிக்கை!

1185
0
SHARE
Ad

ramasamy

ஜோர்ஜ் டவுன் – தமிழ்ப் பள்ளிகளில் அறிமுகம் காணவுள்ள இருமொழித் திட்டம் தாய்மொழிப் பள்ளிகளின் அடிப்படைத் தோற்றத்தையே அழித்துவிடும் என பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி எச்சரித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் “மலேசியப் பள்ளிகளில் ஆங்கில, மலாய் மொழிகளின் திறன்களை வளர்க்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. எனினும் இருமொழித் திட்டம் இந்த நாட்டிலுள்ள தாய்மொழிப் பள்ளிகளின் அடிப்படைத் தோற்றத்தையே அழித்து விடும் என இந்தியர்களும், சீனர்களும் கருதும் பட்சத்தில் அந்தத் திட்டத்தை இயந்திரத்தனமாக அறிமுகப்படுத்துவதில் அர்த்தமில்லை” என இராமசாமி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“தாய்மொழி பயன்பாடு குறைந்து விடும்”

“கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் கற்பிக்கும் இருமொழித் திட்டம் அண்மையில் அறிமுகம் கண்டது. 2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே பிபிஎஸ்எம்ஐ (PPSMI) என்ற கணிதம் மற்றும் விஞ்ஞானப் பாடங்களை ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டிருந்தாலும், மாணவர்கள் ஆங்கிலத்தில் போதுமான தேர்ச்சியைக் கொண்டிராத காரணத்தால், இந்தத் திட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. தற்போது சில மாற்றங்களுடன் மீண்டும் இந்தத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தத் திட்டம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் தங்களின் விருப்பத்திற்கேற்ப இந்தத் திட்டத்தை அமுல்படுத்தலாம் எனக் கூறப்பட்டாலும், இந்தத் திட்டத்தால் தேசியப் பள்ளிகளில் மலாய் மொழியின் பயன்பாடும் தாய்மொழிப் பள்ளிகளில் சீனம் மற்றும் தமிழ் மொழிகளின் பயன்பாடும் மிகவும் குறைந்துவிடும் என்ற அச்சம் நிலவுகின்றது” என்றும் இராமசாமி தனது கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“இந்தத் திட்டத்தை அமுல்படுத்த பல பள்ளிகள் முன்வந்திருந்தாலும், இதனால் மாணவர்களுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து முழுமையான ஆய்வுகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் மலாய் மொழியின் பயன்பாடு தேசியப் பள்ளிகளில் குறைந்து விடும் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதைவிட மிகப் பெரிய அபாயமாக இந்தத் திட்டத்தினால் சீன, தமிழ்ப் பள்ளிகள் காலப் போக்கில் இந்த நாட்டில் இருந்து அகற்றப்படும் அபாயமும் இருக்கின்றது” என்றும் இராமசாமி எச்சரித்துள்ளார்.

“சீனப் பள்ளிகளின் சங்கங்கள் இந்தத் திட்டத்தில் பங்கு பெற மாட்டோம் எனத் தெளிவாகத் தெரிவித்துள்ளதோடு, சீனப் பள்ளிகளின் தோற்றத்தையே இந்த இருமொழித் திட்டம் அழித்து விடும் என்ற அச்சத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதை மறு ஆய்வு செய்யவேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ள இராமசாமி, “இதுவரையில் 49 தமிழ்ப் பள்ளிகள் இந்தத் திட்டத்தில் பங்குபெற விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், நிர்ணயிக்கப்பட்டுள்ள வரைமுறைகளின்படி, எப்படி இந்தத் தமிழ்ப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன என்பது தெரியவில்லை. பிரதமர் துறையில் உள்ள சிலரோடு மஇகா  அணுக்கமாகப் பணியாற்றி, சிறப்பு விருப்பமாக இந்தப் பள்ளிகளின் பட்டியலைத் தேர்வு செய்துள்ளதாகவும் வதந்திகள் உலவுகின்றன. அந்த “சிறப்பு விருப்பம்” எத்தகையது என்பது குறித்தும் விளக்கங்கள் தரப்படவில்லை” என்றும் இராமசாமி தெரிவித்துள்ளார்.

“தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழியின் வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படும் நிலைமை நாளடைவில் சிதைந்து விடும் என்ற அச்சத்தினால் இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மை இந்தியர்கள் இந்தத் திட்டத்தை, தங்களின் சகோதர இனத்தினரான சீனர்களைப் போலவே கடுமையாக எதிர்க்கின்றனர். தமிழ்ப் பள்ளிகளில் தமிழ் மொழியின் பயன்பாடு தற்போது ஏறத்தாழ 65 சதவீதமாக இருந்து வருகின்றது. இருமொழித் திட்டத்தின் அறிமுகத்தினால், தமிழ் மொழியின் பயன்பாடு சுமார் 47 சதவீதமாகக் குறைந்து விடும் என்ற அச்சம் நிலவுகின்றது. தாய்மொழிப் பள்ளிகளில் பெரும்பாலானவை இந்த இருமொழித் திட்டத்தில் பங்கு பெற்றால், அதன் மூலம், பாடங்களை தாய்மொழியின் வழி கற்பிக்கும் சீன, தமிழ்ப் பள்ளிகளின் தோற்றமும், அமைப்பு முறையும் சிதைந்துவிடும் அபாயம் நிலவுகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது” என்றும் இராமசாமி தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.