Home Featured வணிகம் வணிகப் பார்வை: ஆனந்த கிருஷ்ணனுக்கே கிடுக்கிப்பிடி போட்ட உச்ச நீதிமன்றம்! அடுத்து என்ன செய்யப் போகிறார்?

வணிகப் பார்வை: ஆனந்த கிருஷ்ணனுக்கே கிடுக்கிப்பிடி போட்ட உச்ச நீதிமன்றம்! அடுத்து என்ன செய்யப் போகிறார்?

1919
0
SHARE
Ad

Ananda Krishnanகோலாலம்பூர் –மிகக் குறுகிய காலத்திலேயே மலேசியாவில் இரண்டாவது பெரிய பணக்காரராக அனைவரும் அதிசயிக்கும் வகையில் உயர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெருமையைக் கடந்த பல வருடங்களாகவே தக்கவைத்துக் கொண்டுள்ளவர் அவர்.

எந்தவிதக் குடும்பப் பின்புலமும், பிரபலமும் இல்லாமல், வணிகக் குடும்பம் அல்லாத பின்னணியைக் கொண்ட ஆனந்த கிருஷ்ணன், வணிகத்துக்கான உலகப் புகழ்பெற்ற கல்வி மையமான அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தான் பெற்ற கல்வி மற்றும் அமெரிக்காவில் பெற்ற வணிக அனுபவத்தைக் கொண்டும், எண்ணெய் பரிமாற்ற வணிகத்தில் தான் ஏற்கனவே ஈட்டிய வருமானத்தைக் கொண்டும் மலேசியாவிலும் சில வணிக முயற்சிகளில் ஈடுபட்டார்.

பின்னர் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டின் ஆதரவைப் பெற்று, பல்வேறு நவீனமயமான வணிகத் திட்டங்களில் ஈடுபட்டு தனது வணிக நிறுவனங்களைப் பெருக்கி, தொழிலை விரிவாக்கிக் கொண்டார். அவர் தொடங்கிய, முதலீடு செய்த தொழில்கள் அனைத்துமே, அரசாங்கத்தின் சிறப்பு அனுமதி பெற்றவை என்பதோடு அடுத்த கட்ட நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டவை என்பதுதான் அவர் மிகக் குறுகிய காலத்தில், மிகப் பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட சீன வணிகர்களைப் பின்னுக்குத் தள்ளி நாட்டின் இரண்டாவது பணக்காரர் இடத்தை அவர் பிடிப்பதற்கு உதவி புரிந்தது.

#TamilSchoolmychoice

நாட்டின் உயர்ந்த கட்டிடமான பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தை நிர்மாணிப்பதில் பெட்ரோனாசுடன் இணைந்து முக்கிய பங்கு வகித்தவர் ஆனந்த கிருஷ்ணன்.

கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன்

ananda-krishnanதலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் பிறந்து வளர்ந்து, படித்த, ஆனந்த கிருஷ்ணன், இள வயதிலேயே உயர் கல்விக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

இவரது நீண்ட நெடிய, வணிகப் பயணத்தில் இதுவரையில் சட்ட ரீதியான குற்றச்சாட்டுகளோ, அரசு நடைமுறைகளுக்கு முரணாக நடந்து கொண்டார் என்றோ யாரும் பழி சுமத்த முடியாத அளவுக்கு அப்பழுக்கற்ற வணிகப் பாதையைக் கொண்டவர் அவர்.

பல நாடுகளில் தொழிலில் ஈடுபட்டாலும், தான் ஈடுபடும் வணிகத் திட்டங்கள் அனைத்தும், சட்டபூர்வமானதாகவும், அரசாங்கத்தின் அத்தனை அனுமதிகளைப் பெற்றும் நடத்தப்படுவதை உறுதி செய்தவர் அவர்.

இருந்தாலும், அவரது வணிக நடவடிக்கைகளும், அவரது உடன்படிக்கைகளும் எப்போதும் மர்மமாகவே, பகிரங்கப்படுத்தப்படாத வகையிலேயே இருந்து வந்துள்ளன. அவரது வணிக இரகசியங்கள் பாதுகாக்கப்படுகின்றன என்று வைத்துக் கொண்டாலும், இன்னொரு புறத்தில் எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் தலைகாட்டாதவர் அவர். புகழையும் விரும்பாதவர்.

அவரை நேரடியாகச் சந்தித்தவர்களும் மிக மிகக் குறைவு. அவரது வணிக நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பாளர்கள் கூட அவரை நேரடியாகச் சந்தித்ததில்லை.

எழுபத்தொன்பதாவது வயதில் எழுந்திருக்கும் சிக்கல்

இவ்வாறு தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையும், மர்மமான வலைப் பின்னலையும் கொண்டிருக்கும் ஆனந்தகிருஷ்ணன், முதன் முறையாக அதுவும் தனது எழுபத்தொன்பதாவது வயதில்,இந்திய உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கிப் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்.

மலேசிய நாட்டிலும், இந்தியாவிலும் வணிக, சட்டத் தரப்புகள் மிக உன்னிப்பாக அவர் மீதான வழக்கின் விவரங்களைக் கண்காணித்துக் கொண்டும், இந்த சட்ட சிக்கலில் இருந்து அவர் எவ்வாறு மீண்டு வரப் போகிறார் என்பதைக் காணவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

supreme-court-of-india1மேக்சிஸ் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் மலேசியாவில் கோலோச்சிக் கொண்டிருந்த வேளையில், சில வெளிநாடுகளிலும் முதலீடுகளைச் செய்யத் தொடங்கியது. அந்த வகையில் தமிழ் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஏர்செல் நிறுவனத்திலும் 2006-ஆம் ஆண்டில் முதலீடு செய்து அதன் பெரும்பான்மை பங்குகளை வாங்கியது.

அப்போது மிகச் சாதாரணமாகப் பார்க்கப்பட்ட இந்த வணிக ஒப்பந்தம்தான் தற்போது விஸ்வரூபமெடுத்து ஆனந்த கிருஷ்ணனின் வணிக நன்னடத்தை குறித்த சந்தேகங்களையும், அவரது எதிர்காலம் குறித்த சில சட்ட சிக்கல்களையும், ஐயங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏனோ தெரியவில்லை! உச்ச நீதிமன்றத்தில் 2-ஜி வழக்குகள் தொடுக்கப்பட்டு ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தனியாக உருவெடுத்தபோதும், அந்த வழக்கில் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதும், தனது தரப்பு வாதங்களை அவர் முன்னெடுத்து வைக்கவும் இல்லை. தனக்கென ஒரு பிரத்தியேக வழக்கறிஞரை நியமிக்கவும் இல்லை.

aircel-maxis-deal-logoஇதன் காரணமாக, சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஆனந்தகிருஷ்ணன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முறையான பதிலளிக்கப்படாததால், அவர் மீதான சில ஐயப்பாடுகள் எழுந்தன. அந்த நிலையிலும் அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள முன்வரவில்லை.

எதற்காக இத்தகைய சட்ட வியூகத்தை அவர் வகுத்துக் கொண்டு செயல்படுகிறார் என்பதும் புரியவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு நீதிமன்றம் 2-ஜி விவகாரத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டது என்றும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு 2-ஜி வளையத்துக்குள் வராது என்றும் மட்டுமே மாறன் சகோதரர்கள் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் அந்த வாதங்களை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. நிராகரித்தது.

marans-lகலாநிதி மாறன் நடத்தும் சன் தொலைக்காட்சி குழுமத்திலும், ஆனந்த கிருஷ்ணன் கணிசமான அளவில் முதலீடு செய்துள்ளார். தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சிவசங்கரன் என்பவர் உரிமையாளராக இருந்த ஏர்செல் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை 2006-இல் ஆனந்த கிருஷ்ணன் வாங்குவதற்கு உதவி புரிந்தார் என்பதும் அதைத் தொடர்ந்து சிவசங்கரனுக்கு வழங்கப்படாமல் தடுத்து வைத்திருந்த 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஆனந்த கிருஷ்ணன் ஏர்செல் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதும் வழங்கினார் என்பதும் சிபிஐ என்ற இந்திய மத்திய புலனாய்வு நிறுவனம் அடுக்கி வைக்கும் குற்றச்சாட்டுகளில் சில.

இதனைத் தொடர்ந்து, தயாநிதி மாறன் தனக்கு செய்து கொடுத்த சலுகைகளுக்கு ஈடாகத்தான் அவரது சகோதரர் கலாநிதி மாறனின் சன் தொலைக்காட்சி குழுமத்தில் ஆனந்த கிருஷ்ணன் முதலீடு செய்தார் என்பதும் சிபிஜ பின்னியிருக்கும் குற்றச்சாட்டு வலையின் ஒரு பகுதியாகும்.

கைது ஆணை பிறப்பிக்கப்பட்டும் அசராத ஆனந்த கிருஷ்ணன்

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென பல முறை உத்தரவு விடுத்தும், அதனை மதிக்காத ஆனந்த கிருஷ்ணனுக்கு எதிராக கைது ஆணையைப் பிறப்பித்தது உச்ச நீதிமன்றம். அதற்கும் அசரவில்லை அவர்.

Khalid Abu Bakarமலேசியாவின் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் (படம்) இந்திய உச்ச நீதிமன்றத்தின் கைது ஆணை மலேசியாவில் செல்லாது என்றும் அதனைக் கொண்டு யாரையும் கைது செய்ய முடியாது என்றும் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 6)  கூடிய உச்ச நீதிமன்றம், அடுத்த இரண்டு வாரங்களில் (அடுத்த விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதி) ஆனந்த கிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தவறினால் அவரது ஏர்செல் நிறுவனத்தின் அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த அலைக்கற்றை மற்றவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அதே வேளையில், ஏர்செல் தொலைத் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தும் பயனீட்டாளர்கள் பாதிக்கப்படாத வண்ணம் அவர்களுக்கான திட்டத்தை வரையுமாறும் தொலைத் தொடர்பு இலாகாவுக்கும், அமைச்சுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சிக்கும் தடை

reliance-communicationsஇதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்னால் இந்தியாவின் மற்றொரு பணக்காரரான அனில் அம்பானியின் ரிலையன் கொம்யுனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு தாங்கள் உரிமம் கொண்டுள்ள 2-அலைக் கற்றை உட்பட தங்களின் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்யும் ஒப்பந்தம் ஒன்றிலும் மேக்சிஸ் கையெழுத்திட்டிருந்தது.

இந்த விற்பனை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால், இதன்மூலம் ஆனந்த கிருஷ்ணன் வழக்கிலிருந்து தப்பித்து விடுவார் என்றும் கணிக்கப்பட்டது. அதே சமயம், நீதிமன்றம் வராமல், தனது 2-ஜி சொத்துக்களை மட்டும் ஏன் விற்கின்றார் என்ற சந்தேகப் பார்வையும் அவர் மீது பாய்ந்தது.

ஆனால், இந்த முயற்சிக்கும் உச்ச நீதிமன்றம் முட்டுக் கட்டை போட்டு விட்டது. நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நீதிமன்றத்திற்கு வருகை தர மறுப்பவர்கள், நாட்டின் சொத்துக்களின் மீது உரிமை கொண்டாடுவதையோ விற்பனை செய்வதையோ அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கூறியிருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மலேசியத் தரப்புகள்

இரண்டு வாரங்களுக்குள்ளாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு தரப்புகளும் நீதிமன்றத்தில் சுதந்திரமாகத் தங்களைத் தற்காக்க முன்வர வேண்டும் என்றும் இல்லையேல், மேக்சிசின் அலைக்கற்றை உரிமங்கள் பறிமுதல் செய்யப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட நான்கு மலேசியத் தரப்புகள் பின்வருமாறு:

  • ஆனந்த கிருஷ்ணன்
  • அஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க்ஸ் லிமிடெட்
  • மேக்சிஸ் கொம்யுனிகேஷன்ஸ்
  • அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் (மேக்சிஸ் மற்றும் அஸ்ட்ரோ நிறுவனங்களின் இயக்குநர்)

ananda-krishnan-ralph-marshall

ஒரு காலத்தில் இணைபிரியா வணிக நண்பர்கள் – இன்றோ இருவேறு துருவங்கள் – ஆனந்த கிருஷ்ணன், ரால்ப் மார்ஷல்….

இதில் ரால்ப் மார்ஷல் ஆனந்த கிருஷ்ணனுடனான தனது வணிக நட்பை முறித்துக் கொண்டார் என்றும் அஸ்ட்ரோ, மேக்சிஸ் நிறுவனங்களில் இருந்து விலகிக் கொண்டார் என்றும் அறிவிப்புகள் வந்துள்ளன. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்ததரவுகள் அவரை இன்னும் கட்டுப்படுத்துமா அல்லது தனது கடந்த கால வணிக நடவடிக்கைகளுக்காக அவர் தொடர்ந்து இந்திய உச்ச நீதிமன்றத்தின் வழக்கில் தன்னைத் தற்காக்க வேண்டியிருக்குமா என்ற சட்டக் கூற்றுக்கான விடையும் இனிமேல்தான் தெரிய வரும்.

ஆனந்த கிருஷ்ணன் முன்னால் இருக்கும் தற்போதைய சவால்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆனந்த கிருஷ்ணன் இரண்டு வாரங்களுக்குள் நேரடியாகவோ, அல்லது தனது வழக்கறிஞர் மூலமாகவோ, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

தவறினால், அவரது 2-ஜி அலைக்கற்றை உரிமம் பறிமுதல் செய்யப்படும் பட்சத்தில் அவர் இந்தியாவில் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய சொத்துகளை இழக்க நேரிடும். இதனால் அவரது ஏர்செல் நிறுவனத்தின் மதிப்பும் பங்குடமைகளின் மதிப்பும் பெருமளவில் சரியும்.

ஏர்செல் நிறுவனப் பங்குகளுக்கு உரிமையாளர் என்ற பட்சத்தில் மலேசியாவிலும் மேக்சிஸ் நிறுவனத்தின் பங்குகளும், நிறுவன மதிப்பீடுகளும் பெருமளவில் சரிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அஸ்ட்ரோவுக்கு இதனால் நேரடிப் பாதிப்பு இருக்காது என்றாலும், அதுவும் ஆனந்த கிருஷ்ணனின் நிறுவனங்களில் ஒன்று என்ற அளவில் அதன் கௌரவமும், மதிப்பீடுகளும் பாதிப்படையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அஸ்ட்ரோ சன் தொலைக்காட்சி குழுமத்தில் செய்திருக்கும் முதலீடுகளுக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் கருதப்படுகின்றது.

ஆக, உச்ச நீதிமன்றத்தில் தனக்கு எதிராக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில், சட்டபூர்வமாக வழக்கை ஆனந்த கிருஷ்ணன் எதிர்நோக்குவாரா?

அல்லது,

மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவாரா? கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துகளை இழந்தாலும் பரவாயில்லை, இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னால் வரப் போவதில்லை என்ற முடிவை எடுப்பாரா?

என்பதெல்லாம், எதிர்வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் கூடும்போது தெரிந்து விடும்!

-இரா.முத்தரசன்