Home Featured கலையுலகம் கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களைப் பாடமாட்டேன் – எஸ்.பி.பி அறிவிப்பு!

கச்சேரிகளில் இனி இளையராஜா பாடல்களைப் பாடமாட்டேன் – எஸ்.பி.பி அறிவிப்பு!

1439
0
SHARE
Ad

spbசென்னை – மிக நெருங்கிய இளமைக்கால நண்பர்கள் என்று அறியப்பட்ட இசையமைப்பாளர் இளையராஜா, பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவருக்கும் இடையில் எதிர்பாராத வகையில் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

பாடல் துறையில் தனது 50 ஆண்டுகால சாதனையைக் குறிக்கும் வகையில் எஸ்.பி.பாலா உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நேரடி மேடை நிகழ்ச்சிகள் படைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். கடந்த வார இறுதியில் சியெட்டல் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்களில் சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக எஸ்.பி.பாலா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களுக்கு இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சட்ட எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றார். அதன்படி, முன் அனுமதியின்றி உரிமைப் பதிவு (காப்பிரைட்) பெற்ற இளையராஜா பாடல்களை மேடையில் எஸ்.பி.பாலா பாட இயலாது என அதில் கூறப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

இனி இளையராஜா பாடலைப் பாடமாட்டேன்

இந்நிலையில், இது குறித்து பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பேஸ்புக் பதிவில், இனி கச்சேரிகளில் இளையராஜா இசையமைத்த பாடல்களைப் பாடப் போவதில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

“அன்புக்குரிய அனைவருக்கும், அமெரிக்காவில் இருந்து எனது வணக்கம். கடந்தவாரம் சியெட் மற்றும் லாஸ் ஏஞ்சல்சில் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. எங்கள் மீது நீங்கள் காட்டிய பாசத்திற்கு மிக்க நன்றி. அந்நிகழ்ச்சிகளை ஏற்பாட்டாளர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.”

ilayaraja“சில நாட்களுக்கு முன்பு, இளையராஜா தனது வழக்கறிஞர் மூலமாக, எனக்கும், ஸ்ரீமதி சித்ராவிற்கும், சரணுக்கும், உலகளவில் பல்வேறு இடங்களில் கச்சேரிகளை ஏற்பாடு செய்யும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் ‘இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதி இன்றி மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.”

“என் மகன் சரண் தான், அனைத்துலக அளவிலான இந்த இசைக்கச்சேரியை ஏற்பாடு செய்தார். ‘எஸ்.பி.பி.50’ என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்தி வருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த அறிக்கையும் வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த அறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது என்பது தான் தெரியவில்லை. முதல் சொன்னது போல் எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இது தான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.”

“இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் குழுவினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்க வேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்தப் பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனி வரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.”

“உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும். சர்வேஜனா சுகினோபவந்து”- இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது பேஸ்புக் பதிவில் உருக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.”