கோலாலம்பூர் – அரசாங்கத்தின் சிறப்பு நடவடிக்கைத் திட்டத்தின் கீழ், 40 புதியத் தமிழ்ப்பள்ளிகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது, அப்பட்டியலில் செரண்டா தமிழ்ப்பள்ளியும் இணைந்தது.
அடித்தளம் அமைத்து கட்டுமானப் பணிகள் தொடங்க முயற்சிகள் மேற்கொண்ட போது பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு இன்று வரை அப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் நடைபெறாமலேயே இருந்து வருகின்றது.
இந்நிலையில், செரண்டா தமிழ்ப் பள்ளியின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலுசிலாங்கூர் நகராண்மைக் கழகம் அறிக்கை விடுத்திருக்கிறது.
இவ்விவகாரம் குறித்து கல்வியமைச்சின் திட்ட மேலாண்மை ஆலோசனைக் குழுவின் நிர்வாகத் தலைவர் வி.கே.ரகு ஊடகங்களிடம் கூறியிருக்கும் தகவலில், “மிஞ்சாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி தான் தற்போது செரண்டா தோட்டத் தமிழ்ப் பள்ளியாக கட்டுப்படவிருக்கிறது.இப்பள்ளியைக் கட்டுவதற்கான நிலத்தை யுஎம்டபிள்யூ நிறுவனத்தினர் பள்ளி வாரியக் குழுவிடம் ஒப்படைத்தனர். சில பிரச்சினைகளுக்கு இடையில் பள்ளியில் வாரியக் குழு மாறியது. புதிதாக சுப்பிரமணியம் என்பவர் தலைவராகப் பதவி ஏற்றார். பள்ளியைக் கட்டுவதற்கு கடந்த 2014-ம் ஆண்டு கல்வியமைச்சு மனோகரன் என்பவரிடம் குத்தகையை ஒப்படைத்தது.”
“அவரும் பள்ளிக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட போது, முன்னாள் வாரியத் தலைவர் இப்பள்ளியைக் கட்டவிடாமல் பலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றார். பள்ளி கட்டப்படவிருக்கும் நிலத்திற்கே செல்லவிடாமல் தடுத்தார். குண்டர் கும்பலை வைத்து மிரட்டினார். ஆனால் காவல்துறையின் உதவியுடன் அதற்குத் தீர்வு காணப்பட்டது. பள்ளிக்குச் செல்வதற்கு முதலில் பாலம் ஒன்று கட்டப்பட்டது. ஆனால் பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. எனினும் குத்தகையாளர் பள்ளிக்கான அடித்தளத்தை அமைக்கத் தொடங்கினார்.”
“அடித்தளம் அமைக்கும் பணி நிறைவு பெற்றிருக்கும் நிலையில் உலுசிலாங்கூர் நகராண்மைக் கழகம் பள்ளியின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதனை ஆராய்ந்து பார்த்தால், முன்னாள் வாரியத் தலைவர் தான் இப்பிரச்சினைக்குக் காரணம் என்பது தெரியவருகிறது. பள்ளிக்கு நான் தான் இன்னும் வாரியக் குழு தலைவர் என்றும், தனக்குத் தெரியாமல் பள்ளி கட்டுமானப் பணிகள் நடைபெறுவதாக எம்டிஎச்எஸ்-க்கு அவர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.”
“அவர் அனுப்பிய நோட்டீசின் அடிப்படையில் தான் உலுசிலாங்கூர் நகராண்மைக் கழகம் பள்ளிக் கட்டுமானப் பணிகளை நிறுத்தும் படி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. செரண்டா தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்கு அரசாங்க மானியம், குத்தகையாளர்கள் என அனைத்தும் தயாராக இருந்தாலும் கூட, தனிமனிதரால் பணிகள் அனைத்தும் தடைபட்டு நிற்கிறது. எனவே பொதுமக்கள் தான் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்” என்று ரகு செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.