Home Featured நாடு சிவராசா மீது சிலாங்கூர் சுல்தான் காட்டம்!

சிவராசா மீது சிலாங்கூர் சுல்தான் காட்டம்!

1229
0
SHARE
Ad

Sultan-Selangor-sharafudin idris-shah

கிள்ளான் – பள்ளிவாசல் வளாத்தினுள் அரசியல் உரையாற்றிய காரணத்திற்காக சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா மீது சிலாங்கூர் சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷா அதிருப்தியும், ஆத்திரமும் கொண்டிருக்கிறார் என சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகாவின் இயக்குநர் டத்தோ ஹாரிஸ் காசிம் தெரிவித்திருக்கிறார்.

தனது அதிருப்தியை சிலாங்கூர் சுல்தானே தன்னிடம் நேரடியாகத் தெரிவித்ததாக ஹாரிஸ் காசிம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சுபாங் கம்போங் மலாயுவில் உள்ள அன் நூர் பள்ளிவாசலில் அரசியல் உரையாற்றியதன் மூலம் அந்தப் பள்ளிவாசலின் மாண்பை சிவராசா குலைத்து விட்டார் என்பதால்தான் சுல்தான் அதிருப்தி கொண்டுள்ளார். சிவராசா சுபாங் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமாவார்.

sivarasa-dec14

தனது தனிப்பட்ட செயலாளர் டத்தோ முகமட் முனிர் பானி மூலமாகவும் தனது அதிருப்தியை சுல்தான் இதற்கு முன்னர் வெளிப்படுத்தியிருந்ததாகவும், நேற்று செவ்வாய்க்கிழமை கம்போங் செமந்தா பள்ளிவாசல் திறப்பு விழாவிலும் அதனை முன்னிட்டு நோன்பு துறக்கும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டபோது, தன்னிடமும் சிவராசாவின் நடவடிக்கைகள் குறித்து தனது அதிருப்தியை சுல்தான் தெரிவித்தார் என ஹாரிஸ் காசிம் கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அன் நூர் பள்ளிவாசலின் நிர்வாகிக்கு சுல்தானின் அதிருப்தி தெரிவிக்கப்பட்டு, சிவராசாவின் நிகழ்ச்சி குறித்து விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

அந்த நிர்வாகி வழங்கியிருக்கும் விளக்க அறிக்கையைப் பார்த்த பின்னர், அந்தப் பள்ளிவாசலின் நிர்வாகியும், அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும், பள்ளிவாசல்களை அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற தனது உத்தரவை அவமதித்திருக்கின்றனர் எனத் தான் கருதுவதாகவும் சிலாங்கூர் சுல்தான் (படம்) தெரிவித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளிவாசலின் நிர்வாகி மற்றும் சிவராசாவின் உரையை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர் ஆகியோர் மீது ஜாயிஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில விவகாரத் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுல்தான் உத்தரவிட்டிருக்கிறார்.

சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி சார்பாக அந்தப் பள்ளிவாசல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவராசா தொழுகை நடத்தப்படும் இடத்தில் தனது உரையை நிகழ்த்தியதாக ஊடகங்கள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளப்பட்டு பரவியதில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.