Home நாடு சனுசி முகமட் நூர் கைது – தேச நிந்தனை வழக்கு – சர்ச்சைகள் தொடர்கின்றன

சனுசி முகமட் நூர் கைது – தேச நிந்தனை வழக்கு – சர்ச்சைகள் தொடர்கின்றன

561
0
SHARE
Ad
முகமட் சனுசி முகமட் நோர்

கோலாலம்பூர் : சிலாங்கூர் சுல்தானை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக கெடா மந்திரி பெசார் சனுசி முகமட் நூர் கைது செய்யப்பட்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கிறது. அவர் அதிகாலை 3.00 மணிக்குக் கைது செய்யப்பட்டதற்குக் காரணம் அவரை மலேசியக் காவல் துறை தொடர்பு கொள்ள முடியாததே என மலேசியக் காவல் துறையின் தலைவர் (ஐஜிபி)  டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேன் தெரிவித்திருந்தார்.

அதனால்தான் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரும் நோக்கத்திலேயே அவரை அதிகாலை கைது செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது என ரசாருடின் தெரிவித்திருந்தார்.

எனினும் மந்திரி பெசார் சனுசி இந்தக் கூற்றை மறுத்தார். தான் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தந்ததாகவும், தனக்கிருந்த அலுவல் காரணமாக அடுத்த நாள் நீதிமன்றம் வருவதாகக் கூறியதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்ட சனுசி மீது கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) செலாயாங் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்ட அவர் அடுத்த 5 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

அவர் மீதான கைது நடவடிக்கை குறித்து மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திடம் புகார் செய்வோம் என பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அறிவித்திருக்கிறார்.

6 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் சூழலில் கெடா மந்திரி பெசார் சிலாங்கூர் சுல்தானை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்படுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறும் மாநிலங்களில் கெடாவும் ஒன்றாகும்.

பாஸ் கட்சியின் சார்பில் மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டதிலிருந்து சர்ச்சைக்குரிய வகையில் சனுசி தொடர்ந்து பேசி வருகிறார்.

சிலாங்கூர் சுல்தானையும் அவமதிக்கும் வகையில் அவர் பேசியதைத் தொடர்ந்து அவர் மீது காவல்துறை புகார்கள் செய்யப்பட்டன. விசாரணைகள் முடிவடைந்து அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

கெடா சட்டமன்றத் தேர்தலில் சனுசி நூர் கைது காரணத்தினால் வாக்காளர்களிடையே அனுதாபம் பெருகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், சுல்தான் ஒருவரை அவமதித்ததால் நடுநிலை மலாய் வாக்காளர்களிடையே சனுசிக்கும் பாஸ் கட்சிக்கும் வரும் சட்டமன்றத் தேர்தல்களில் எதிர்ப்பலைகள் கிளம்பும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.