புத்ரா ஜெயா, அக்டோபர் 16 – கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்கள் மீதான புகார்களை சமர்ப்பித்து ஏறத்தாழ 11 மாதங்கள் கடந்தும், இன்னும் சங்கப் பதிவதிகாரி தனது முடிவை அறிவிக்காததை கண்டித்து இன்று புத்ரா ஜெயாவிலுள்ள பிரதமர் அலுவலகத்தின் முன் சுமார் 1000 மஇகா உறுப்பினர்கள் திரண்டனர்.
முன்னாள் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையில் திரண்ட அவர்களோடு, பல மாநிலங்களிலிருந்து வந்திருந்த மஇகா தொகுதித் தலைவர்களும் இந்த கண்டனக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரதமர் அலுவலகம் நோக்கி ஆட்சேப மனு வழங்க நடந்து செல்லும் உறுப்பினர்கள்
தங்களின் புகார்கள் மீது கடந்த 11 மாதங்களாக எந்தவித முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் சங்கப் பதிவதிகாரியின் கால தாமதப் போக்கைக் கண்டிப்பதுதான் இந்தக் கண்டனக் கூட்டத்தின் நோக்கம் என்றும், மற்றபடி எந்த மஇகா தலைவரையும் தாக்குவதோ, இழிவாகப் பேசுவதோ தங்களின் நோக்கம் இல்லை என்பதையும் கூட்டத்தை வழி நடத்திய தலைவர்கள் தெளிவாக எடுத்துரைத்தனர்.
ஆட்சேப மனுவை பிரதமர் துறை அலுவலக அதிகாரிகளிடம் வழங்குவதற்காக பின்னர் அனைவரும் பேரணியாக அணிவகுத்து சுமார் 100 மீட்டர் தூரம் நடந்து சென்றனர். அவர்களிடம் இருந்து ஆட்சேப மனுவை பிரதமர் துறை அதிகாரிகளும், சங்கப் பதிவகத்தின் அதிகாரிகளும் பெற்றுக் கொண்டனர்.
தலைவர்கள் உரை
ஆட்சேப மனு வழங்கப்படுவதற்கு முன்பாக கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த முக்கிய தலைவர்கள், வந்திருந்த மஇகா உறுப்பினர்கள் முன்னால் உரையாற்றினர்.
தலைவர்களின் உரைகளை ஆர்வமுடன் செவிமெடுக்கும் உறுப்பினர்கள்….
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்தக் கூட்டம் மஇகாவுக்கு எதிரானதோ, எந்த தலைவருக்கும் எதிரானதோ அல்ல என தெளிவாகத் தெரிவித்தனர்.
தாங்கள் சமர்ப்பித்திருந்த தேர்தல் முறைகேடுகள் தொடர்பான விசாரணையை இன்னும் முடிக்காமல் இழுத்தடித்து, முடிவை அறிவிக்காமல் காலதாமதம் செய்யும் சங்கப் பதிவதிகாரியின் கால தாமதத்தைக் கண்டிக்கவே நாங்கள் கூடியிருக்கின்றோம் என்றும் அவர்கள் கூறினர்.
சங்கப் பதிவதிகாரியின் முடிவு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெளிவுபடுத்தினர்.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
டத்தோ டி.மோகன் முன்னின்று தலைமையேற்று நடத்திய இந்தக் கூட்டத்தில் கெப்போங் தொகுதி தலைவர் டத்தோஸ்ரீ சா.வேள்பாரி, சிலாங்கூரிலுள்ள கிள்ளான் தொகுதித் தலைவர் செனட்டர் டத்தோ விக்னேஸ்வரன், கெடா மாநிலத்தைச் சேர்ந்த கூலிம் பண்டார் பாரு தொகுதி தலைவர் ஆனந்தன், பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த லோகநாதன், டத்தோ ஞானசேகரன்,
மற்றும் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் துணையமைச்சர் டத்தோ டி.முருகையா, பேராக் தெலுக் இந்தான் தொகுதியைச் சேர்ந்த டத்தோ ராமச்சந்திரன், அம்பாங் தொகுதியைச் சேர்ந்த ஜேம்ஸ் காளிமுத்து, டத்தோ முனியாண்டி, நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ வி.எஸ்.மோகன்ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆட்சேப மனுவை பிரதமர் துறை அலுவலக அதிகாரியிடம் வழங்கும் டி.மோகன், எஸ்.ஏ.விக்னேஸ்வரன், சா.வேள்பாரி, என்.முனியாண்டி, ஜேம்ஸ் காளிமுத்து ஆகியோர்…
மேலும், ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மலாக்கா மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருமாள், குளுவாங் தொகுதித் தலைவர் ராமன், பகாங் மாநிலத்தைச் சேர்ந்த டத்தோ தேவேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த செத்தியா வங்சா தொகுதித் தலைவரும் மாநிலச் செயலாளருமான ராஜா சைமன், செராஸ் தொகுதித் தலைவர் டத்தோ பெரு.கருப்பன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்ற தலைவர்களில் அடங்குவர்.
பல தலைவர்களும் கூட்டத்தில் பேசிய பின்னர், அமைதியான முறையில் கூட்டத்தினர் பிரதமர் அலுவலக வாயில் வரை நடந்து சென்றனர்.
அங்கு டி.மோகன் தலைமையில் ஆட்சேப மனு வழங்கப்பட்ட பின்னர் கூட்டத்தினர் அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.
அந்தப் பகுதிக்கு செல்லும் சாலைகளில் போக்குவரத்து காவல் துறையினர் இடையூறு ஏதும் ஏற்படாத வண்ணம், பாதுகாப்பு ஏற்பாடுகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.