கோலாலம்பூர், ஏப்ரல் 25 – கடந்த மார்ச் மாதம் தொடங்கி எதிர்வரும் ஜூன் மாதம் வரை நடைபெறப் போகும் இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டிலான இந்தியத் திருவிழாவின் ஒரு பகுதியான “இந்தியத் திரைப்படக் கண்காட்சி” இன்று மலாயாப் பல்கலைக் கழகத்தில் உள்ள துணைவேந்தர் கட்டிடத்தில் (Chancery Building) திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை 11.00 மணியளவில் பிரதமர் நஜிப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் இந்த கண்காட்சியைத் திறந்து வைத்து உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மலாயாப் பல்கலைக் கழக துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ முகமட் அமின் ஜலாலுடினும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்தியத் தூதர்
ரோஸ்மா உரையாற்றுவதற்கு முன்பாக, இந்தியத் திரைப்படங்களுக்கும் மலேசியாவுக்கும் இடையில் உள்ள நீண்டகாலத் தொடர்புகளை விளக்கும் வண்ணம் காணொளி ஒன்று திரையிடப்பட்டது. அதில், தமிழ், இந்திப் படங்களில் வெளிவந்த மலேசியக் காட்சிகள், மலேசியா பற்றிய வசனங்கள் இடம் பெற்ற சுவாரசியமான திரைப்படத் துணுக்குகள் ஒளிபரப்பப்பட்டன.
பிரதமர் பார்த்த ‘கபி குஷி கபி கம்’ இந்தித் திரைப்படம்
மலேசியா, இந்தியத் திரைப்படங்களைக் கவரும் நாடாக இருப்பதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்ட ரோஸ்மா, மொழி புரியாவிட்டாலும் மனித உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதில் சிறப்பான இடத்தை வகிப்பதாகக் குறிப்பிட்டார்.
“சில சமயங்களில் நானே இந்திப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த மொழி புரியாவிட்டாலும், கதாபாத்திரங்கள் அழும்போது நானும் அழுவேன். மற்றவர்களும் இதே போல் அழுவார்கள். ஏன் அழுகிறோம் என்பது தெரியாது. இருந்தாலும், கதாபாத்திரங்கள் பிரதிபலிக்கின்ற உணர்வுகளை நாமும் பிரதிபலிப்போம். அந்த அளவுக்கு வலுவாக உணர்ச்சிகளை பிரதிபலிக்கக் கூடியவை இந்தித் திரைப்படங்கள்” என்று ரோஸ்மா தனது உரையில் குறிப்பிட்டார்.
மேலும் ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் போன்ற பிரபலங்கள் மலேசியாவில் இன பாகுபாடின்றி இல்லங்கள் தோறும் ஒலிக்கின்ற பெயர்களாக இருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
பிரதமர் நஜிப்பும், இந்தித் திரைப்படங்களின் ரசிகர் எனக் குறிப்பிட்ட ரோஸ்மா, நஜிப் ‘கபி குஷி கபி கம்’ என்ற இந்தித் திரைப்படத்தை எப்படிப் பார்த்து முடித்தார் என்பதை நகைச்சுவையாக விளக்கினார்.
“ஒருமுறை பாடல்கள் கேட்டுவிட்டு நான் கபி குஷி கபி கம் இந்திப் படம் பார்க்க வேண்டும் என நஜிப் தெரிவித்தார். நாங்களும் அந்தப் படத்திற்கான சிடியை (குறுந்தட்டு) வாங்கினோம். ஒரிஜினல் சிடியாகத்தான் வாங்கினோம் (சிரிப்புடன்). அந்தப் படத்தைப் பார்த்து முடிக்க அவர் இரண்டு மாதங்கள் எடுத்துக் கொண்டார். ஒரு பதினைந்து நிமிடம் பார்ப்பார். பின்னர் எனக்கு வேலை இருக்கின்றது எனப் புறப்பட்டு விடுவார். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து விட்ட இடத்திலிருந்து பார்ப்பார். திரும்பவும் 15 நிமிடங்கள் பார்த்துவிட்டு, வேலை வந்து விட்டது எனக் கிளம்பிப் போய்விடுவார். சில நாட்கள் கழித்து விட்டு மீண்டும் பார்க்கும்போது, என்ன நடந்தது என்பது மறந்துபோய்விட்டது, மீண்டும் ஆரம்பத்திலிருந்து போடுங்கள் என்பார். இப்படியாக, அவர் அந்தப் படத்தைப் பார்த்து முடிக்க ஏறத்தாழ இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டார்” என சிரிப்புடன் ரோஸ்மா தெரிவித்தார்.
“இந்தியத் திரைப்படங்களின் பழம் பெருமையையும், நூற்றாண்டு கால வரலாற்றையும் இந்த கண்காட்சி மூலம் கண்டு பெருமையும், ஆச்சரியமும் அடைந்தேன். இந்தியத் திரைப்படங்கள் மத்திய கிழக்கு, ஐரோப்பா ஆகிய பகுதிகளிலும் பிரபலமடைந்துள்ளன. இந்தியத் திரைப்படங்களின் மூலம் மாநில முதல்வர்களாக சில சினிமா நட்சத்திரங்கள் அரசியலில் உயர்ந்தார்கள் என்பதையும் நான் அறிந்து வைத்திருக்கின்றேன்” என்றும் ரோஸ்மா குறிப்பிட்டார்.